பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருகிறது -என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். கோவை, பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்த பால்வளத் துறை அமைச்சர், கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அனைத்து ஆவின் பூத்துகளையும் நவீனமயமாக்கி வருவதாக கூறிய அமைச்சர், இது மக்களுக்காக வேலை செய்யும் நிறுவனம் என்றும் ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம் என்றும் கூறினார்.
மேலும், ஆவின் நிறுவனம் மூலம் நெய், இனிப்புகள் உள்ளிட்ட பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆவின் பொருட்கள் விலை குறைவானவை மற்றும் தரமானவை என்றும் கூறினார். பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுவதாகவும் ஆவின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.