தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கோவையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
கோவையில் உள்ள பல்வேறு இல்லங்களை சார்ந்த 400க்கும் மேற்பட்ட ஆண், பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர். வாலிபால், ஓட்டப்பந்தயம், செஸ், கேரம்போர்டு என ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டு போட்டியின் சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் முன்னிலையில் உரையாற்றி உற்சாகப்படுத்தினார். கல்வியும், விளையாட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்த அவர், கல்வி ஒருவரின் அறிவை மேம்படுத்த உதவும், விளையாட்டு ஒருவரை மன உறுதியடைய செய்ய உதவும், எனவே கல்வியும் விளையாட்டும் இரு கண்கள் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கலிடம் நடிகர் ஆரி பேசுகையில், “சமுதாயத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, பொதுத்தளத்தில் உள்ள அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். மற்றவர்களை விட ஆசிரம இல்லங்களில் வாழும் குழந்தைகள், கடும் போராட்டத்தையும் நெருக்கடியும் சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு சமூகம் பக்க பலமாக உதவி செய்து, அவர்களின் வாழ்வை உயர்ந்த வேண்டும்” என்றார்.



