fbpx
Homeபிற செய்திகள்130வது இந்திய அரசியல் சட்டத் திருத்தம் தேவையா?

130வது இந்திய அரசியல் சட்டத் திருத்தம் தேவையா?

நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவினால் முன்மொழியப்பட்டுள்ள 130ஆவது இந்திய அரசியல் சட்டத் திருத்த மசோதா சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

ஜனநாயகத்திற்கான சவப்பெட்டியை ஆயத்தப்படுத்தி, சர்வாதிகார – யதேச்சதிகார ஆட்சியை மறைமுகமாக செயல்படுத்தும் ஒரு புதிய ஏற்பாடு தான் இது என்றும் ஜனநாயகத்தை புதைத்து விட்டு, சர்வாதிகார விதை ஊன்றிய துக்க நாள் என்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.


விசாரணைக் கைதியாக 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி தானாகவே பறிபோகும் என்பது, நீதி வழங்கும் நடைமுறைக்கு கூட எதிரானது என்பது பாமரனுக்கும் புரியும் ஒரு விஷயம் தான்.


இச்சட்டம் ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல. அதனால் தான் இதனை எதிர்க்கட்சித் தலைவர்கள் கருப்புச்சட்டம் என விமர்சிக்கிறார்கள்.


ஒருவர்மீது எந்த வழக்குப் போடப்பட்டாலும், குற்றம் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும் வரையில், அவர் ‘‘குற்றம்’’ சுமத்தப்பட்டவரே தவிர, குற்றம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, தண்டனை உறுதியாக வழங்கும்வரை, அவர் நிரபராதிதான்; குற்றவாளி அல்ல.


ஏன் இந்த வழிமுறையை இன்றைய ஒன்றிய அரசு மாற்றத்துடிக்கிறது? அதற்கு என்ன அவசியம் வந்து விட்டது? ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது தானே நம் நாட்டின் நீதி பரிபாலனத்தின் சிறப்பு. அப்படியிருக்க தற்போது கொண்டு வந்துள்ள 130 வது சட்டத்திருத்தம், பல நிரபராதிகளுக்கு பதவி பறிப்பு என்ற தண்டனையை முன்கூட்டியே தருவதற்கு வழிகோலும் அல்லவா?


அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல; சிவில், கிரிமினல் சட்ட விதிமுறைகளுக்கேகூட, பாஜக ஒன்றிய அரசு முன்வைத்துள்ள சட்டம் முற்றிலும் முரணாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயகப் பதவியில் அமர்ந்தவர்களை குறுக்கு வழியில் இப்படிப் பதவி நீக்கம் செய்வது, ‘நானே ராஜா; நாங்கள் வைத்ததே சட்டம்’ என்ற சர்வாதிகார எண்ணத்திற்கு ஆட்சியாளர்களைத் தூண்டிவிடும் ஆபத்து உள்ளது என்பதே ஜனநாயகவாதிகளின் அச்சம்.


இம் மசோதா சட்டமானால், அதனைக் கொண்டு வருபவர்களையும்கூட பதம் பார்க்கக் கூடும் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த சட்ட மசோதா, ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது.


இந்திய அரசியமைப்பு தந்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பகற்கொள்ளை போன்ற இச்சட்டம் வேண்டவே வேண்டாம் என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.


ஜனநாயகம் தழைத்து ஓங்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img