மறைந்த மூத்த பத்திரிகையாளர் சுதன் அப்பாதுரையின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு, ஐயாவின் நினைவுகளைப் பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த எம்.என்.சுதன் அப்பாதுரையின் நினைவாக, கோவை சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் உள்ள சபா மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இதில் குடும்பத்தினர், தேவாலய நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள்

மற்றும் நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அவரது வாழ்க்கை

மற்றும் சேவைகளை நினைவு கூர்ந்தனர். கூட்ட இறுதியில் டேவிட் அப்பாதுரை நன்றியுரை ஆற்றினார்.

பாதிரியார் பிலிப் கே.மல்லி பேசுகையில், “சுதன் அப்பாதுரை தனது முன்னோர்களின் ஆன்மிக அடித்தளத்தை வலுப்படுத்தி, அதை எதிர்கால தலைமுறைகளுக்கு பாரம்பரியமாக விட்டுச் சென்றார். மென்மையான அவரது வாழ்க்கை சமூகத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியது.” என்றார்.

சினோட் ஆஃப் பெந்தகொஸ்தல் சர்சஸ் மாடரேட்டரும் ஐபிஏ தேவாலயங்களின் தலைவருமான டாக்டர் டேவிட் பிரகாசம் பேசுகையில், “ஒழுக்கம், நேர்மை மற்றும் இறைநம்பிக்கையுடன் வாழ்ந்த தலைசிறந்த நிர்வாகியாக சுதன் அப்பாதுரை திகழ்ந்தார். கல்வித் துறையில், குறிப்பாக சி.எஸ்.ஐ மகளிர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தில், தொலைநோக்கு பார்வையுடனும் நேர்மையுடனும் செயல்பட்டார்.

பத்திரிகைத் துறையில் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டவர். சமூக சேவைகளில் உதவ தயங்காத மனப்பான்மை கொண்டவர்” என்றும் பிரகாசம் குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நோபுள் தம்புராஜ் (Vice Chief of Army) பேசுகையில், “சுதன் அப்பாதுரை அனைவரையும் ஈர்க்கும் நகைச்சுவை உணர்வும், மனிதர்களை ஒன்றிணைக்கும் தலைமைத் தன்மையும் கொண்டவர். குடும்ப நிகழ்வுகள், தேவாலயப் பணிகள் என எங்கு தேவைப்பட்டாலும் தூரம் பார்க்காமல் துணை நின்றவர். அவரின் வாழ்க்கை அமைதியான சேவையும், மனிதநேயமும், உறுதியான விசுவாசமும் நிறைந்தது என்றார்.

பத்திரிகையாளர் கருணாகரன் பேசுகையில், “முதல்வர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்புகளில், தனிப்பட்ட பயனை நாடாமல், மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளைத் துணிச்சலுடன் கேள்வி எழுப்பியவர் சுதன் அப்பாதுரை. அவரது நேர்மை, பணியின் தன்மையால் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட, சுதன் அண்ணாவின் பெயர் சொல்லி அழைத்த சம்பவங்களும் உள்ளது.” என்றார்

சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.ஏ.செல்வராஜ் பேசுகையில், “நீதியும் நேர்மையும் மனிதநேயமும் நிரம்பிய நபராக விளங்கினார் சுதன் அப்பாதுரை. எளிமை மற்றும் தன்மையுடன் வாழ்ந்த மனிதர் அவர். சிறுபான்மை சமூகத்திற்கான “மார்னிங் ஸ்டார்” என்ற பெயரைப் பெற்ற சுதன் ஐயா, தேவாலய சேவைகளிலும் சமூக அர்ப்பணிப்பு பணிகளிலும் தீவிரமாக செயலாற்றினார். ஒரு பத்திரிகையாளராக உண்மைகளைத் தேடி மக்களிடம் பகிர்ந்தார்.” என்றார்.

Touch Ministries நிறுவனத்தின் செயல் இயக்குனர் டெரன்ஸ் நேசராஜ் பால் பேசுகையில், மறைந்த எம்.என்.சுதன் அப்பாதுரை நேர்மையான தலைவராகவும், சிறந்த ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். “நல்ல போராட்டத்தைப் முன்னெடுத்து, பந்தயத்தை முடித்து, விசுவாசத்தை காத்தவர்”. குடும்பத்தின் ஆன்மீக ஆதாரமாக இருந்தார். அவர் விட்டுச்சென்ற நம்பிக்கையும் மதிப்புகளும் அவரது சந்ததியினரால் தொடரப்படும்.” என்றார்.

Young Fishers நிறுவனர் செல்வின் ராஜ்குமார் தனது உரையில், “கடவுள், குடும்பம், பிறருடன் நட்பு என்று அனைத்து வகைகளிலுமவர் முன்னுதாரணமாக சுதன் அய்யாவின் அமைதியான தன்மை பல குடும்பங்களுக்கு ஒரு வாழ்வியல் எடுத்துக்காட்டாக இருந்தது. ஒரு பிரச்சனையை மென்மையாகவும், உறுதியாகவும் கையாண்டு, அதனைத் திருத்துவார்” என்றார்.

பி பிசி தமிழ் மண்டல தலைவர் செல்வகுமார் பேசுகையில், “சுதன் அவர்கள் நேர்மையின் அடையாளமாக வாழ்ந்து பல தலைமுறை பத்திரிகையாளர்களை வழிநடத்தியவர். கர்வம் இன்றி அனைவரையும் அன்புடன் ஊக்குவிப்பவர்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிடம் தனது நேர்மையான கருத்துகளால் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அவரது தாக்கம் இந்த உலகில் தொடர்ந்து வாழும்“ என்றார்.

ஜமாஅத்-இ- இஸ்லாமி ஹிந்த் செயலாளர் ஹக்கீம் பேசுகையில், “சமூக ஒற்றுமை, கல்வி மற்றும் சிறுபான்மை நலனுக்காக பணியாற்றிய கருணைமிக்க தலைவராக சுதன் அப்பாதுரை. பத்திரிகைத் துறையில் பலருக்கு வழிகாட்டியாகவும், கல்வித் துறையில் மதிப்புமிக்க ஆளுமையாகவும் விளங்கினார். 1990களின் இறுதியில் ஏற்பட்ட கலவர காலத்தில், முஸ்லிம் மாணவர்களின் கல்வியைத் தொடர தைரியமாக நடவடிக்கை எடுத்தார். அதன் மூலம் சமூக இடைவெளிகளை குறைத்து, ஒற்றுமையை வளர்த்தார்.” என்றார்.

சுதன் அப்பாதுரையின் மைத்துனரும் மதகுருவுமான பாதிரியார் மதன்சிங், பேசுகையில், “சுதன் அப்பாதுரை நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர். குடும்பம், தேவாலயம் மற்றும் சமூகப் பணிகளில் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, ஆன்மீக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், பொது வாழ்க்கை மற்றும் தேவாலய சேவைகள் ஆகிய நான்கு தளங்களிலும் அவர் விட்டுச் சென்ற பணிகள் தொடரும். அவரது வாழ்வு பலருக்கும் ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.” என்றார்.

என் நெஞ்சைவிட்டு நீங்காத சிரிப்பு கலந்த முகம்
(Rev. Dr.Franklin Jothi. M.A, M.Phil/ D/D. Rtd/ Presbyter, CSI Copmbatore Diocese)
என் அன்பிற்கினிய நண்பர் சுதன் அப்பாதுரை. அவர்கள் குறித்து எண்ணும் போது, எழுதும் போது வரும் நினைவுகள் பல உண்டு, நான் காந்திபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத் தில் பணி புரிந்த நாள் முதல் அவரின் நட்பில் நெருக்கம் உண்டாயிற்று. அதற்கு முன்னர் திருமண்டல நிர்வாகக்குழு கூட்டங்களுக்கு வரும் போது அவரின் நெருக்கம், புரிந்து கொள்ளலால் இவை அதிகமாயிற்று. அவரும் நானும் பலமுறை பல கமிட்டிகளில் கோவை திருமண்டலத்தில் பணி புரிந்திருக்கிறோம்.
நிர்வாகக் குழு, finance Committee Social Concern Committee. Higher Education Committee -இவற்றில் அவருடன் பணி புரிந்திருப்பது நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது. கமிட்டிகளில் பேசும்போது சில நேரங்களில் கோபம் வரும். ஆனால் அவரே அமைதிப்படுத்திக் கொள்வார்.
திரு.மைக்கேல் பொன்னுசாமி, தேவநா-ஜயா, சேலம் ஆர்.பி.டேவிட், ஞான கடாட்சம்- இவர்களோடு கமிட்டிகளில் பங்கு பெற்றது எனக்குக் கிடைத்த பாக்கியம்.
அதேபோல பேராயர்கள் தங்கமுத்து, வில்லியம் மோசஸ்…இவர்கள் தான் நாங்கள் பணிபுரிந்த கமிட்டிகளில் இருந்தார்கள். அமரர் சுதன் அவர்களின் அப்பாவும் எனக்கு அதிக நெருக்க மானவர். அவர் என்னை அடிக்கடி காந்திபுரம் ஆலய குரு இல்லத்தில் சந்திப்பார்.
சுதன் அப்பாதுரை என்று சொல்லும்போது அவரின் சபாரி ஆடை தான் ஞாபகம் வரும். அது அவரது சிறப்பு. அத்தோடு அவரின் சுறுசுறுப்பான நடையும் அவரின் அவையடக்கமும் வாய்ப்பு கிடைக்கும் போது அவர் பேசும் சொற்பொழிவுகளும் மிக கவர வைக்கும்.
மருதமலை அடிவாரத்தில் உள்ள அமர்ஜோதி தொழுநோயாளிகள் முகாம் குறித்து அவருடன் பகிர்ந்து கொள்ளும்போது அன்னை தெரசாவுடன் என் பயிற்சியைக் குறித்தும் பகிர்ந்து கொண்டேன். என்னுடைய அருளுரைகளை சுதன் அப்பாதுரை மிகவும் ரசிப்பார். அவரின் சிரிப்பு கலந்த முகம் என் நெஞ்சைவிட்டு நீங்காத ஒன்று. அவரின் இழப்பு பேரிழப்பு.
அவரின் குடும்பத்தாருக்கும் என்னுடைய வருத்த நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். அவரின் ஆன்மா இறைவனாரின் மடியில் இருக்கிறது என்ற ஒரு எண்ணமே நிறைந்த சமாதானத்தைக் கொடுக்கும்.
பணிவுக்கும் கருணைக்கும் ஒரு பாலத்தை உருவாக்கியவர்!
சிஎஸ்ஐ கோவை மறைமாவட்ட போதகர் ரெவரெண்ட் பிரவீன் ஜெபராஜ்,

40 வயது வித்தியாசம் இருந்தபோதிலும், சுதன் ஐயா தன்னை ஒரு மேலதிகாரியாக அல்லாமல் ஒரு நண்பராகவே பாவித்தார் என்று கூறினார். தோளில் ஆறுதலாகத் தட்டுவது போன்ற மென்மையான சைகைகள் மற்றும் உரையாடல் முடிந்த பிறகும் மனதில் நிலைத்திருக்கும் ஊக்கமூட்டும் வார்த்தைகள் போன்ற அவரது ஊக்கமளிக்கும் இயல்பை அவர் நினைவுகூர்ந்தார். சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியின் தாளாளர் உட்பட உயர் பதவிகளை வகித்தபோதும், அவரது அன்பும் எளிதில் அணுகக்கூடிய தன்மையும் ஒருபோதும் குறையவில்லை.
சுதன் ஐயாவின் தலைமைப் பண்பு வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது அதிகாரப் பதவிகளில் உள்ள பலர் தங்களைச் சுற்றிச் சுவர்களைக் கட்டிக்கொள்ள முனைகையில், அவர் தொடர்ந்து பாலங்களையே கட்டினார். இந்த குணம், மிகச் சாதாரணமான மக்கள்கூட பயமோ தயக்கமோ இன்றி அவரை அணுகுவதை இயல்பானதாக்கியது என்று ரெவரெண்ட் ஜெபராஜ் கூறினார்.
ஒரு தெளிவான சமூக உவமையைப் பயன்படுத்தி, அந்தப் போதகர் மூன்று வகையான மனிதர்களைப் பற்றி விவரித்தார். சிலர், பஞ்சு போல, சமூகத்திலிருந்து உறிஞ்சி தங்கள் சொந்த அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். மற்றவர்கள், களிமண் போல, தாங்கள் கலக்கும் எல்லாவற்றையும் சேறாக்கி மாசுபடுத்திவிடுகிறார்கள். மூன்றாவது வகையினர், தண்ணீரில் கரைந்தாலும் அதன் நிறத்தையோ சுவையையோ மாற்றாது இருக்கும் சர்க்கரை போன்ற சிலரில் நமது சுதன் ஐயா அவர்களும் ஒருவராவார் என்றார்.



