மேட்டுப்பாளையத்தில் பிடிபட்ட 12 அடி நீள ராஜ நாகம். விவசாய தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இரண்டு நாட்களாக நகர்ந்து செல்ல இயலாமல் தவித்த ராஜநாகத்தை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த வனத்துறையினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலப்பட்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள புதரில் ராஜநாகம் ஒன்று இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் இருப்பதை பார்த்த அந்த பகுதி கிராம மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு இன்று தகவல் அளித்தனர்.
இதனையடுத்து தொழில் முறை சார்ந்த பாம்பு பிடி வீரர்களுடன் அங்கு சென்ற சிறுமுகை வனத்துறையினர் வன எல்லையில் புதருக்குள் பதுங்கி இருந்த பாம்பினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்..
கொடிய விஷமுள்ள ராஜநாகத்தை நெருங்குவது ஆபத்தானது என்ற நிலையிலும் சாமர்த்தியமாக நகர்ந்து சென்ற பாம்பு பிடி வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி அந்த ராஜநாகத்தை மீட்டு வெளியே எடுத்து வந்தனர்.
மீட்கப்பட்ட ராஜநாகம் சுமார் 12 அடி நீளமுள்ளது. மேலும் அந்த பாம்பின் உடல் நிலை பற்றி ஆய்வு செய்த போது உணவு எதுவும் உட்கொள்ள முடியாமல் சோர்வான நிலையில் இருந்தது தெரியவந்தது..
இதன் காரணமாக பாம்பு எங்கும் முன்னேறி செல்ல முடியாமல் ஒரே இடத்தில் படுத்திருப்பது தெரியவந்தது..இன சேர்க்கை காலங்களில் ராஜநாகம பாம்புகள் இது போல் ஒரே இடத்தில் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்..
ராஜநாகம் பிடிக்கப்பட்டது விவசாய தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதி என்பதால் அதனை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்க முடிவு செய்த வனத்துறையினர் பிடிபட்ட ராஜநாகத்தை வனத்தின் உட்பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தனர்.