தேனி சிறையில் கைதிகள் தப்பி ஓடக் காரணமாக இருந்த பாதுகாப்பு வீழ்ச்சி குறித்து விசாரணை நடந்து வருவதாக கோவையில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி:
தேனியில் உள்ள மாவட்டக் காவல் சிறையிலிருந்து நேற்று 17 ரிமாண்ட் கைதிகள், மூன்று காவலர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் இதுவரை 4 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 கைதிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சிறையின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய டிஜிபி சந்தீப் ரத்தோர் மற்றும் ஐஜி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கைதிகள் தப்பி ஓடக் காரணமாக இருந்த பாதுகாப்பு வீழ்ச்சி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் வழக்கு மற்றும் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நள்ளிரவு 1:30 மணிக்கு அவர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிகளின் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கும் விவகாரத்திலேயே கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
“இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் சோலார் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் வரை 87,000 ரூஃப்டாப் சோலார் இணைப்புகள் இருந்த நிலையில், கடந்த 5 மாதங்களில் புதிதாக 27,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் வீடுக ளுக்குச் சோலார் இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. மின்சாரக் கட்டணம் மற்றும் மின் உற்பத்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



