ஏற்றுமதி சந்தையில் நிலவும் புதிய தேவைகளை எதிர்கொள்ளவும், செலவுகளைக் குறைக்கவும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் முறைகளைத் தங்களது தொழில் நடைமுறையின் ஒரு பகுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் தற்போதைய மாற்றங்கள் குறித்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
ஈரோடு மாவட்டம் தமிழகத்தின் முக்கிய எம்எஸ்எம்இ தொழில் மையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜவுளி, ஆயத்த ஆடைகள், மஞ்சள் மற்றும் மசாலாப் பொருள்கள், உணவுப் பதப்படுத்துதல், பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள், பொறியியல், தோல், காகிதம், பிளாஸ்டிக், தேங்காய் நார் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
உலகளாவிய சந்தையில் ஒரு பொருளின் தரத்துடன், அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, பேக்கேஜிங் செய்யப்படுகிறது, பயன்படுத்திய பின்னர் எவ்வாறு அகற்றப்படுகிறது என்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி சந்தைகளில் கார்பன் தடம் குறைப்பு, மறுசுழற்சி மற்றும் வளங்களைத் திறம்பட பயன்படுத்துதல் ஆகியவை முக்கியமான வணிக அளவுகோல்களாக மாறியுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மூலம் மூலப்பொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதுடன், மறுசுழற்சியை அதிகரித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் மேம்படுத்த முடியும். எனவே, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமல்ல; முக்கியமான வணிக உத்தியாகவும் உள்ளது என்றார்.
அரசுத் துறைகள், தொழில் அமைப்புகள், வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, “பசுமை ஈரோடு – பசுமை எம்எஸ்எம்இ” என்ற இலக்கை நோக்கி மாவட்டத்தைப் பசுமைத் தொழில் மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொழில்முனைவோர் அரசு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், அரசு மின்னணு சந்தைத் தளமான நிமீவி-ல் பதிவு செய்து நாடு முழுவதும் தங்களது பொருள்களைச் சந்தைப்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம், ஈரோடு சார்பில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங் நிறுவனத்துடன் இணைந்து ஹோட்டல் ராயல் எம்பஸியில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. ஆட்சியர் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான தொழில் வழிகாட்டி கையேட்டையும் வெளியிட்டார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் மற்றும் வங்கிகளின் ஏற்றுமதிக் கடன் வசதிகள் குறித்து வல்லுநர்கள் விளக்கினர். தொழில்முனைவோர் தயாரித்த பொருள்களின் கண்காட்சியையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கு.திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் என்.விவேகானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



