தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கே.கள்ளிக்குடி சமுதாயக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீக் தயாள், தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதன்படி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ரூ.1,02,500 மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் ரூ.6,000 மதிப்பிலான விதை, 3 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான பிரம் சீடர் கருவிகள் வழங்கப்பட்டன. மகளிர் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான சுய உதவிக்குழு கடனுதவி, பிரதான் மந்திரி அனுசூசித் ஜாதியினர் யோஜனா திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 16 பயனாளிகளுக்கு ரூ.17.05 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, வருவாய் வட்டாட்சியர் செல்வகணேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



