Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் ஆணைகளை வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் ஆணைகளை வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கிக் கடன் ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
சாலையோர வியாபாரிகள் கந்துவட்டி மற்றும் கூடுதல் வட்டிப் பாதிப்புகளில் இருந்து மீண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளவே மாநகராட்சி சார்பில் வங்கி மூலம் கடன் வசதிகளும் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரி களுக்குக் கடன் உதவி மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. நகர் நல அலுவலர் டாக்டர் கணேஷ் வரவேற்புரையாற்றினார்.

இதில் கலந்துகொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளையும், 50-க்கும் மேற்பட்டோருக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கிப் பேசுகையில், “மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் வீடுகளில் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வோரை ஊக்குவிக்க முதலில் ரூ.15,000, பின்னர் ரூ.25,000, தொடர்ந்து ரூ.50,000 வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
இதுவரை 9,257 மனுக்கள் பெறப்பட்டு, 7,593 பேருக்கு அடையாள அட்டைகளுடன் கூடிய வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரிகள் கடைகளை அமைக்க வேண்டும். வி.இ. சாலையில் கடைகளுக்கு அனுமதியில்லை.

பழைய பேருந்து நிலையம் முன்பும் கடைகளுக்கு அனுமதியில்லை என்ற போதிலும், வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதியே இதுவரை கடைகள் அப்புறப்படுத்தப்படவில்லை. பெரிய கடைகளின் முகப்பை மறித்து வியாபாரிகள் கடைகளை அமைக்கக் கூடாது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி அலுவலர் சரவணபாமா ஸ்டேட் பாங்க் மேலாளர் ராஜேஷ் மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி,வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திரளான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img