கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று மாலைநேரத்தில், மது போதையில் டாட்டா ஏஸ் வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 6 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் டாட்டா ஏஸ், வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரை சிறை பிடித்து, அவரை, பரிசோதனை செய்த பொழுது, அவர் மது போதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்துள்ளது.
இதனால் விலை உயர்ந்த பைக்குகளை அங்கு நிறுத்தியிருந்த வாகன உரிமையாளர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், டாட்டா ஏஸ் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் பதிவுகளை பரிசோதனை செய்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டாடா ஏஸ் வாகனம் பைக்குகள் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பொதுமக்கள் யார்க்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மது போதையில் வாகனம் இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



