Homeபிற செய்திகள்விளையாட்டு…மருந்தில்லா மருத்துவம்!குழந்தைகளுக்கு விளையாட்டு முக்கியம்

விளையாட்டு…மருந்தில்லா மருத்துவம்!குழந்தைகளுக்கு விளையாட்டு முக்கியம்

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக விளங்கும் ஒரு முக்கியக் கருவியாகும். விளையாடாத பிள்ளை விபரம் அறியாது…என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு குழந்தை உலகத்தைப் புரிந்து கொள்ளும் முதல் வகுப்பறையாக விளையாட்டுக் களம் திகழ்கிறது.


ஓடி, ஆடி விளையாடுவதால் குழந்தைகளின் தசைகளும் எலும்புகளும் வலுவடைகின்றன.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுகள் குழந்தைகளின் உடல் பருமன் மற்றும் சோம்பேறித்தனத்தைத் தடுத்து, அவர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
ஒரு விளையாட்டில் தோற்கும்போது அல்லது தடை ஏற்படும் போது, அதை எப்படிச் சரிசெய்வது என்ற மூலோபாய சிந்தனை அவர்களுக்கு இயல்பாகவே வளர்கிறது.


நண்பர்களுடன் இணைந்து விளையாடும் போது, மற்றவர்களுடன் எவ்வாறு பழக வேண்டும், எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற நற்பண்புகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
குழு விளையாட்டுகளில் (உதாரணமாக: கிரிக்கெட், கால்பந்து) ஈடுபடும் போது, சூழ்நிலையைக் கையாளுதல் மற்றும் தலைமை தாங்கும் திறன் வளர்கிறது.


பள்ளிப் பாடம், தேர்வுகள் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை விளையாட்டு எளிதாகப் போக்குகிறது.
விளையாட்டில் கிடைக்கும் வெற்றியைக் கொண்டாடுவது போல, தோல்வியையும் மனமுடையாமல் ஏற்றுக்கொண்டு மீண்டும் முயற்சிக்கும் விளையாட்டுத் தனம் (Sportsmanship)அவர்களுக்குக் கிடைக்கிறது.
இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன‌. இதைப்பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவிற்கு இல்லை.
உடல் உழைப்பு அற்ற நிலையிலேயே நமது குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். காலையில் இருந்து மாலை வரை பள்ளி, அதன் பிறகு சில வகுப்புகள், அதன் பிறகு வீட்டுப்பாடம், அதன் பிறகு டி.வி அல்லது செல்போன், அதன் பிறகு தூக்கம்.


இதுதான் நமது குழந்தைகளின் அன்றாடமாக இருக்கிறது. சமீப காலத்தில் குழந்தைகளில் அதிகளவில் வரக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் கூட இந்த உடலுழைப்பு இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கும்.
ஐந்தாவது படிக்கும் மாணவன் ஒருவனை சமீபத்தில் அவனது அம்மா அழைத்து வந்திருந்தார்கள். நிறைய அடம், துறுதுறுவென ஒரு இடத்தில் இல்லாமல் இருப்பது, எதிலும் கவனமின்மை, பள்ளியில் மற்ற குழந்தைகளைத் தொந்தரவு செய்வது, யாரையாவது எதற்காவது வம்பிழுத்துக் கொண்டேயிருப்பது… இவைதான் அவனுடைய பிரச்னைகளாக இருந்தன.


அவனது அன்றாடப் பணிகளைப் பற்றிக் கேட்டேன். மேலே நான் சொல்லியபடிதான் இருந்தது. பள்ளியிலாவது விளையாட அனுமதியுண்டா?’ எனக் கேட்டேன். மைதானமே இல்லை என சொன்னார்கள்.
அவனைத் தினமும் அருகில் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று ஓடச் சொல்லுங்கள் என்றேன். நீச்சல் பயிற்சியில் சேர்த்து விடுங்கள் என்றேன். ஒரு மாதத்திலேயே அவனது துறுதுறுப்பும், தொந்தரவும் குறைந்திருந்தது. உடலுழைப்பு எவ்வளவு முக்கியம், அதுவும் அவனது வயதில் என்பதை அவனது அம்மா கண்கூடாகத் தெரிந்து கொண்டார்.


உடற்பயிற்சியின்போது எண்டார்ஃபின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அது ஒரு இயற்கையான வலி நிவாரணி. மேலும் அது ஒரு கிளர்ச்சியையும் நமக்குள் ஏற்படுத்தும், மேலும் செரட்டோனினு டைய செயல்பாடுகளும் அதன் உற்பத்தியும் கூட உடற்பயிற்சியின்போது அதிகரிக்கிறது. காலையில் ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அந்த நாள் முழுவதும் மனதுக்கு இதமாய் இருப்பதற்கு செரட்டோனின்தான் காரணம். மேலும் உடற்பயிற்சியை வழக்கமாகக் கொள்ளும் போது உடலில் BDNF என சொல்லக்கூடிய நியூரோஜெனிசஸைத் தூண்டக்கூடிய ஹார்மோன் பெருமளவில் சுரக்கிறது.


இதன் மூலம் வயது முதிர்வைத் தள்ளிப் போடலாம். தொடர்ச்சியாக தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு டிமென்ஷியா என்ற மறதி நோய் வரும் வாய்ப்புகள் குறைவு என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.
ஆரோக்கியமான உணவு, அதனுடன் ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றவற்றில் நாம் கவனமாக இருக்கும்போது வயது மூப்படைவதும் அதனால் ஏற்படும் சிக்கல்களும் நிச்சயம் குறையும்.


உடற்பயிற்சி என்பது மிகக் கடுமையானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக இலகுவான உடற்பயிற்சி கூட மிக அதிகமான பலன்களை உடலுக்கும், மனதுக்கும் கொடுக்கிறது. இருபது நிமிடம் நடைப்பயிற்சி, சின்னச்சின்ன வேலைகளைச் செய்வது, படிக்கட்டுகளில் நடந்து செல்வது, அருகில் இருக்கும் கடைகளுக்கு, மார்க்கெட்டுகளுக்கு நடந்து செல்வது அல்லது சைக்கிள் உபயோகிப்பது, வாரம் ஒருமுறை நீச்சல் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டு இவை போதும் ஆரோக்கியத்திற்கு.

கட்டுரையாளர்:
டாக்டர் ராதாகிருஷ்ணன், MBBS,DPM..
நிலா மனநல மருத்துவமனை.
வல்லம்.
94433 55726.

படிக்க வேண்டும்

spot_img