இலங்கையில் இருந்து கோவைக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் தவறவிட்ட ஒன்றரை பவுன் தங்க நகையை மீட்டு, மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் விமலேந்திரன் (27). இவர் கடந்த 16ம் தேதி குடும்பத்தினருடன் கோவைக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்று டீ குடித்துள்ளனர். அப்போது விமலேந்திரனின் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை திடீரென காணாமல் போனது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமலேந்திரன் இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், சிறுமி தவறவிட்ட நகையை அங்கிருந்த வாலிபர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
அதில் நகையை எடுத்து சென்றது கரூரை சேர்ந்தவர் என்பதை கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவரிடமிருந்த ஒன்றரை பவுன் தங்க நகையை பத்திரமாக மீட்டனர். அந்த தங்க நகையை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், தவறவிட்ட விமலேந்திரனை நேற்று நேரில் வரவழைத்து ஒப்படைத்தார். நகையை விரைவாக மீட்டுத் தந்த கோவை மாநகர போலீசாருக்கு இலங்கை குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.



