கோவையில் குடிநீர், சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் நிலவும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்துத் தீர்வுகாண வலியுறுத்தியும், பல்வேறு பொதுநலக் கோரிக் கைகளை முன்வைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண் டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் நிறைவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த முறையீட்டுப் போராட்டத்தில் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், பாண்டியாறு & புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஆனைமலை & நல்லாறு பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு காலம் தாழ்த்தக் கூடாது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள இரண்டு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும், கோவையைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வனவிலங்கு மோதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும், கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கோவை வடகோவை ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், பழங்குடி மக்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், கோவையில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் புதிய நீதிமன்றக் கட்டிடம் அமைக்க வேண்டும், மதுக்கரை மரப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும், சின்னவேடம்பட்டி ஏரிப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தையும் ஏரியில் கழிவுநீர் விடும் திட்டத்தையும் கைவிட வேண்டும், மற்றும் மாநகராட்சி விளையாட்டு மைதானங்களைத் தனியாருக்குக் கொடுக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரப்பட்டன.
போராட்டத்தின் இடை யே செய்தியாளர் களிடம் பேசிய மு.வீரபாண் டியன், கோவையில் சமீபநாட் களில் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று என்று குறிப்பிட்ட அவர், இது போன்ற சம்பவங்கள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வலுமைக்கு எதிரானவை என்றார். வெறும் காவல்துறை நடவடிக்கை மட்டுமன்றி, சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான கல்வியின் மூலமே போதை அரக்கனை ஒழிக்க முடியும் என்றும், அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக & கர்நாடக எல்லையில் மாடு மேய்க்கச் சென்ற பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்ட அவர், எல்லையோரப் பகுதிகளில் வாழும் ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக எல்லைகளைக் கடப்பது இயல்பான ஒன்று என்றும், அவர்களைப் பயங்கரவாதிகளைப் போலச் சுட்டுக் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத படுகொலை என்றும் சாடினார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் எல்லையோர மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காவேரி, மேகதாது மற்றும் எல்லைப் பிரச்சினைகளின் போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளை வீழ்த்தவுமே சிபிஐ உறுதியோடு செயல் படுவதாகத் தெரிவித்தார். மேலும், வெளியிலிருந்து ஆதரவு அளித்தாலும், மக்கள் நலனுக்கு மாறான செயல்கள் அல்லது வாக்குறுதி மீறல்கள் நடக்கும்போது தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தொடர்ந்து பதிவு செய்வோம் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.



