தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கிடும் வகையில், சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மாணாக்கர்கள் தரமான கல்வியை பெறுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினையும் பெற்று பயன்பெறும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட முதல்வரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைகின்ற நோக்கில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிடும் பொருட்டும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கல்வியின் அடிப்படையில் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வி அறிவோடு சேர்த்து தொழில் பயிற்சியையும் வழங்கிடும் பொருட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்புத் துறையால் தனியார்துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், முன்னணி தனியார் துறை நிறுவனங்களை பங்கேற்க செய்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றார்போல் தனியார் துறையிலும் சிறந்த வேலை வாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இதுபோன்று மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜி.டி.என் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமானது 08.08.2026-அன்று திண்டுக்கல் ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 182 முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இம்முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மொத்தம் 4,539 வேலைநாடுநர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து, நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். இதில், 691 ஆண் வேலைநாடுநர்கள், 547 பெண் வேலைநாடுநர்கள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1,243 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி வழங்கினார்.
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமன ஆணை பெற்று, பயன்பெற்ற நாகல் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வி பார்வதி அவர்கள் தெரிவித்ததாவது:
என் பெயர் பார்வதி, எனது சொந்த ஊர் திருநெல்வேலி, நான் திண்டுக்கலில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றேன். எனது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். விவசாயக் கூலி வேலைக்கு மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும். எனவே, எனது பெற்றோர் ஈட்டி வரும் மிகக் குறைந்த வருமானத்தில், குடும்பம் நடத்த மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் நானும் ஏதாவது வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் மாபெரும் தனியார்த்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக எனக்கு தகவல் கிடைத்தது.
இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, பொறியியல் படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் நான் கலந்துகொண்டேன்.
தனியார்துறை நிறுவனத்தினர் எனது சான்றிதழ்களை சரிபார்த்து, அன்றைய தினமே ஒரு தனியார் நிறுவனத்தில் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. மாதச்சம்பளம் ரூ.19,000 என்று தெரிவித்தனர். நான் அதற்கு சம்மதித்து, அந்த தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து கொண்டேன். இந்த வருமானம் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களைப் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை கருத்தில் கொண்டு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேபோல தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமன ஆணை பெற்று, பயன்பெற்ற பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் கூறியதாவது:
எனது பெயர் லிங்கேஸ்வரன், எனது தந்தை ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எனது பெற்றோர் என்னை படிக்க வைத்தனர். படிப்பு முடித்தவுடன் ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தேன். ஆனால் அங்கு கல்வித்தகுதிக்கேற்ற பணி, சம்பளம் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில், திண்டுக்கல் ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக செய்தித்தாள் வாயிலாக அறிந்தேன். அதன்படி, 08.08.2026-அன்று நடைபெற்ற தனியார்த்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டேன். அங்கு பல்வேறு தனியார் நிறுவனத்தினர் எனது சான்றிதழ்களை சரிபார்த்தனர். எனது கல்வி தகுதிகேற்ப அன்றையதினமே ஒரு தனியார் நிறுவனத்தில் எனக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.
அப்பணிக்கான மாதச்சம்பளமும் ரூ.15,000 என்று தெரிவித்தனர். அப்பணியும் எனக்கு மன நிறைவாக இருந்தது. மேலும், இதுபோன்ற அரசு சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணி வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், அந்த வேலைவாய்ப்பில் உறுதித்தன்மை ஏற்படுவதுடன், எங்களுக்கு தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. எனக்கு கிடைத்துள்ள இப்பணியானது எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. என்னைப் போன்ற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொழில் தொடங்கிட, அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, தொழில் தொடங்க தேவையான பல்வேறு பயிற்சி வகுப்புகள், அரசு தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகள், தனியார் துறையின் மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் பயன்பெற்று அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களின் வாழ்வினை மேம்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
வெளியீடு:
மு.ராஜசெல்வன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.



