உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி சார்பில், தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஃபிளாஷ் மாப் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் மற்றும் தாய்&சேய் நலன் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களுக்கு குடும்பம், பணியிடம், சுகாதார நிறுவனங்கள் மற்றும் சமூகம் முழுவதும் ஆதரவான சூழல் உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கியில் இதுவரை 31.25 லட்சம் மில்லி லிட்டர் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக பாஸ்சுரைஸ் செய்யப்பட்டு, குறைப்பிரசவத்தில் பிறந்த மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ரேஸ் கோர்ஸ் தாமஸ் பார்க்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், செவிலியர் கல்லூரி மாணவர்கள் ஃபிளாஷ் மாப் கலைநிகழ்ச்சி மூலம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பேரணியில், தாய்&சேய் நலன் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



