fbpx
Homeபிற செய்திகள்விருதுநகரில் இளம் பேரிடர் நண்பன் பயிற்சி துவக்கம்

விருதுநகரில் இளம் பேரிடர் நண்பன் பயிற்சி துவக்கம்

விருதுநகர் செந்திகுமார் நாடார் கல்லூரியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அக்கல்லூரியில் இளம் பேரிடர் நண்பன் தன்னார்வலர்களுக்கான ஒரு வார உறைவிடப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா தொடங்கிவைத்தார். இந்த பயிற்சி ஜூலை 1 முதல் 7 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சி, செந்திகுமார் நாடார் கல்லூரி மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.


பயிற்சியில் மொத்தம் 376 தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர். பேரிடர் காலங்களில் முதல் மீட்பர்களாக செயல்படுவது, வெள்ளம், புயல், நிலநடுக்கம், தீ விபத்து உள்ளிட்ட அவசரச் சூழல்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது, முதலுதவி, சி.பி.ஆர். சிகிச்சை, கயிறு கட்டுதல், மிதவை தயாரித்தல் மற்றும் எச்சரிக்கைத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட செயல்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), இந்தியச் செஞ்சிலுவைச் சங்க வல்லுநர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.


பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு துணை நின்று, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்புடன் தன்னார்வலர்கள் செயல் பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் கனக ராஜ், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய வல்லுநர் டாக்டர் முருகானந்த், வட்டாட்சியர் ராஜாமணி, கல்லூரி முதல்வர் சாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img