இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை, திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திருச்சி மண்டலத்தின் 65வது கிளையாகும்.
இதனை பல்கலைக்கழக வேந்தர் ஏ.ஸ்ரீனிவாசன் வாழ்த்துக்களுடன், துணைவேந்தர் டாக்டர் சி.கே.ரஞ்சன் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
அவர் பேசுகையில், கல்வி வளாகங்களின் அருகில் வங்கி சேவைகள் கிடைப்பது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ஜி.ஸ்ரீராம் பேசியதாவது:
புதியதாக தொடங்கப்பட்ட இந்த கிளையில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு, டிஜிட்டல் வங்கி சேவைகள், ஏடிஎம் வசதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய வங்கி சேவைகளும் மாணவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தொய்வின்றி வழங்கப்படும்.
கல்விக் கடன், விவசாயக் கடன், நகைக்கடன், சிறுகுறு தொழில் கடன் போன்ற கடனுதவிகளையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இந்த புதிய கிளையில் விரைவாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளை கிளை மேலாளர் ஜெ.டேனியல் ரிச்சர்ட் வரவேற்றார்.



