fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ரூ.200.85 கோடி மதிப்பீட்டில் 598.80...

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ரூ.200.85 கோடி மதிப்பீட்டில் 598.80 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது: செய்தியாளர் பயணத்தில் ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், சின்னதாராபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் நேற்று முன்தினம் (24ம் தேதி) செய்தியாளர் பயணத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப் பின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசின் ‘முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்‘ என்பது கிராமப் புறங்களில் உள்ள சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும்.

இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள சேதமடைந்த சாலைகளைப் புதுப்பித்தும், மண் சாலைகளைத் தரமான தார்ச் சாலைகளாக மாற்றியும், கிராமங்களுக்கும் நகரங் களுக்கும் இடை யிலான போக்கு வரத்தை எளிதாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.

நீண்ட காலமாகப் பராமரிப்பு இல்லாமல் இருந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை மேம்படுத்தியும், குக்கிராமங்கள் மற்றும் தொலைதூரக் குடியிருப்புகளை முக்கிய சாலைகளுடன் இணைத்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான போக்குவரத்துத் தேவையைத் தாங்கும் வகையில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சாலைகள் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களைச் சந்தைக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடிகிறது. அவசர காலங்களில் மருத்துவமனைக்குச் செல்லவும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும் சிறந்த போக்குவரத்து வசதி கிடைக்கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு மேம்படுகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 4 & 5 ஆண்டுகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 200.85 கோடி மதிப்பீட்டில் 598.80 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், சின்னதாராபுரம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.22.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணியையும், மொஞ்சனூர் ஊராட்சியில் ரூ. 31.85 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய தார்சாலை அமைக்கும் பணியையும் மற்றும் துக்காச்சி ஊராட்சியில் ரூ. 61.68 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய தார்சாலை அமைக்கும் பணியையும் என மொத்தம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீ.ரெ.வீரபத்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செய்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந் தனர்.

படிக்க வேண்டும்

spot_img