பிற்பகல் தமிழ் நாளிதழ், ஆப்டர்நூன் (Afternoon) ஆங்கில நாளிதழ் ஆகிய இரு மாலை இதழ்களின் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான எம்.என்.சுதன் அப்பாதுரை இன்று (டிசம்பர் 6) காலை 11 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோடு 8வது வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 82.
கடந்த 06-08-1943 அன்று பிறந்த எம்.என்.சுதன் அப்பாதுரை எம்.ஏ.பட்டதாரி ஆவார். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் பத்திரிகை துறையில் கால் பதித்தார். தனது தந்தையார் ஏ.இ.சாலமோன் அப்பாதுரையுடன் இணைந்து 1977ம் ஆண்டு ஆப்டர்நூன் ஆங்கில நாளிதழை எம்.என்.சுதன் அப்பாதுரை தொடங்கினார். 1981ம் ஆண்டு பிற்பகல் நாளிதழையும் தொடங்கினார்.
தந்தையாரோடு இணைந்து 1965ம் ஆண்டு சுதன் பப்ளிசிட்டி என்ற விளம்பர நிறுவனத்தைத் தொடங்கி அதனையும் வெற்றிகரமாக வழி நடத்தினார்.
பத்திரிகை துறையில் வலுவாக காலூன்றிய எம்.என்.சுதன் அப்பாதுரை, முதன்மை ஆசிரியராக இருந்து இரு நாளிதழ்களையும் வளர்த்தெடுத்தார்.
முன்னணி மாலை இதழ்களுக்கு இணையாக பிற்பகல், ஆப்டர்நூன் இதழ்களில் செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தார். அவர் தீட்டி வந்த தலையங்கங்கள் ஒவ்வொன்றும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வழிகாட்டின.
இன்றைக்கு இரு நாளிதழ்களும் சாதனை படைத்து வருவது, அவர் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதற்கு அடையாளம் ஆகும்.
கோயமுத்தூர் பத்திரிக்கை அசோசியேஷன் தலைவராகவும் இருந்தார்.
கோவை மாவட்டத்தின் சிறந்த பத்திரிகையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோருக்கு மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் சிஎஸ்ஐ ஆலயப்பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வந்ததோடு, பல்வேறு சமூக நலப்பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.
டயோசியேசன் நிர்வாகக் குழு உறுப்பினர், கோவை திருச்சி ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலய செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் இருந்த அவர், பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி செயலாளர், நீலகிரி மாவட்டம் கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி தாளாளர், சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் என பல்வேறு பொறுப்புகளை திறம் பட வகித்து கல்விப் பணியாற்றிய பெருந்தகை (எம்.என்.சுதன் அப்பாதுரை) ஆவார்.
அனைவரோடும் நல்லிணக்கத் தோடு இனிமையாக பேசி பழகக்கூடியவர்.
தனது நிறுவனத்தின் பணியாளர்களின் வளர்ச்சியிலும் அவர் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
எம்.என்.சுதன் அப்பாதுரை மறைவுச் செய்தி அறிந்ததும் திருச்சி ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலய நிர்வாகிகள், பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர் வந்து மலரஞ்சலி செலுத்தினர்.
நண்பர்கள், பொது மக்கள் திரளாக வந்து அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அன்னாரின் அடக்க ஆராதனை கோவை, திருச்சி ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் (7ம் தேதி) பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது.
மறைந்த எம்.என்.சுதன் அப்பாதுரைக்கு ஹெலன் சுதன் அப்பாதுரை என்ற துணைவியாரும் ஆடம் அப்பாதுரை, டேவிட் அப்பாதுரை ஆகிய இரு மகன்களும் டாக்டர் கிரேஸ் பிரியதர்ஷினி, டாக்டர் ஜாஸ்மின் சுகிர்தா ஆகிய இரு மகள்களும் பேரன் & பேத்திகளும் உள்ளனர்.



