கோவை ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் பத்மபூஷண் டாக்டர் தி.சு.அவினாசிலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவுச்சொற்பொழிவு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை உயர்தொழில்நுட்ப அரங்கத்தில் நடைபெற்றது.
அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் துணை நிர்வாக அறங்காவலர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி உரையாற்றினார்.
அவர் தமது உரையில், அய்யா அவர்கள் மகளிர் கல்விக்காக பாடுபட்ட மாமனிதர் என்றும் உழைப்பினாலும் விவேகத்தாலும் தான் மேற்கொண்ட அனைத்து செயல்களிலும் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திய அவரது தியாகங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் அறங்காவலர் ஆர்.சோமசுந்தரம் நினைவுச்சொற்பொழிவு உரையாற்றினார். தனது முதல் குரு அவினாசிலிங்கம் அய்யா என்று கூறினார்.

பெண்முன்னேற்றம், ஆன்மீகம், தேசியம் போன்றவற்றை அய்யா இலட்சியமாகக் கொண்டவர். பன்முக ஆளுமைத்தன்மை கொண்ட அய்யாவின் பாதையை அனைவரும் பின்பற்றுவோம் என்று தமது உரையில் ஆர்.சோமசுந்தரம் கூறினார்.
நன்னெறி கல்வியையும் பண்பாட்டுக் கல்வியையும் வழங்கும் பெட்டகமாக அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் திகழ்கிறது என்றும் இலட்சியவாதியான அய்யா குறித்த அனுபவங்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.
நீங்கள் இந்த சமுதாயத்திற்காக என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை மாணவியரிடம் கேட்டு அய்யாவின் அருளின் ஆற்றல் நூலினை மாணவிகள் வாசித்து அதன் உள்ளார்ந்த பயனை உணர்ந்து வாழ்வில் வளம் பெறுமாறு அறிவுறுத்தினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பாரதிஹரிசங்கர் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவியர் என 300 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



