கோவை – நீரிழிவு நோயாளிகள் மருந்து, மாத்திரை மற்றும் உணவுமுறையை மருத்துவர் கூறியபடி பின்பற்றாததால், தலை முதல் கால் வரை பல்வேறு உடல் பிரச்சனைகள் உருவாகும் அபாயம் அதிகரித்து வருவதாக கோயம்புத்தூர், ராம்நகர், கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை நிறுவனர் – தலைவர் டாக்டர் பாலமுருகன் எச்சரித்துள்ளார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அவர் கூறியதாவது : –
இந்தியாவின் நீரிழிவு நிலைமை தற்போது மிகுந்த கவலைக்கிடமான நிலையில் உள்ளது. நாட்டில் 101 மில்லியன் மக்கள், மக்கள் தொகையின் 11.4 சதம் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலாக 136 மில்லியன் பேர் முன்நீரிழிவு நிலையில் உள்ளனர். இது வருங்காலத்தில் நீரிழிவு அபாயம் வேகமாக உயரும் ஒரு ஆபத்தான சிக்னல்.

கோவா (26.4 சதம்), புதுச்சேரி (26.3 சதம்), கேரளா (25.5 சதம்) ஆகியவை அதிக பரவல் கொண்ட மாநிலங்களாகும். உத்தரபிரதேசம் 4.8 சதம் மட்டுமே இருப்பதால் குறைந்த பரவல் கொண்ட மாநிலமாக குறிப்பிடப்படுகிறது.
வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் மரபணு போன்றவை நீரிழிவு அதிகரிக்க காரணமாக உள்ளன.
இன்றைய நிலையில் ஒவ்வொரு இரண்டு இந்தியர்களில் ஒருவருக்கு அதிக இரத்தச் சர்க்கரை உள்ளது. நீரிழிவு மிகவும் ஆபத்தான வகையில் இளம் வயதினரிடமும் விரைவாகப் பரவி வருகிறது என்றார்.
நீரிழிவு கட் டுப்பாட்டில் உணவுமுறையே முதன்மையான ஆயுதம் ஆகும்.
காய்கறி, பழம், பருப்பு, தானியம், மிதமாக சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய், கண்டிப்பாகக் கட்டுப்பாடு தேவை. கொழுப்பு இல்லாத பால், குறைந்த கொழுப்பு இறைச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி தினமும் குறைந்தது 30 நிமிடம் நடப்பதாலேயே தொடங்கலாம்.

மருந்து, மாத்திரை அல்லது இன்சுலின் தவிர்த்தால், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, கண் கோளாறு, நரம்பு பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால் கொழுப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, கண் பரிசோதனை ஆகியவற்றை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்துவர வேண்டும். கால் புண்கள், நரம்பு பாதிப்பு போன்றவற்றை வருடத்திற்கு ஒருமுறை நிபுணர் மூலம் பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
கோவை, ராம்நகர், கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை நீரிழிவு, கண், சிறுநீரகம், நரம்பு மற்றும் எலும்பு நோய்களுக்கு 50 சதம் சலுகையுடன் முதுநிலை சுகாதார பரிசோதனை மற்றும் இலவச ஆலோசனை முகாம் நடைபெறும். மேலும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை உணவியல் கண்காட்சியும் நடைபெறும்.
பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை டாக்டர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.



