தமிழக அறிவியல் வளர்ச்சிக்கு அயலகத் தமிழர்கள் உதவ வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை சார்பில் அந்நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
ஜப்பான் உள்ளிட்ட சில அயல்நாடுகளில் ஆழத்தடம் பதித்த அறிவியலாளர்கள் பலர் அறிவியல் உயர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய 45 ஜப்பான் நாட்டுத் தமிழ் அறிவியலாளர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை கடந்த மூன்று ஆண்டுகளில் இனம் கண்டு பாராட்டு மடல்கள் வழங்கி அங்கீகரித்துள்ளது. இன்னும் இத்தகைய தகுதிமிக்க அறிவியலாளர் களை ஒருங்கிணைக்கும் பணியில் பேரவை ஈடுபட்டுள்ளது.
இத்தகைய அயல் நாடுகளில் உள்ள தலைசிறந்த தமிழ் அறிவியலாளர்கள் தமிழ்நாட்டு அறிவியல் வளர்ச்சிக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்க முன்வர வேண்டும். அத்தகைய முன்னணி அயலகத் தமிழ் அறிவியல் ஆளுமைகளை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மண்ணில் அறிவியலை வளர்க்க அரசும், சமூக நல அமைப்புகளும் முழு முனைப்புடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்வில் ஜப்பான் நாட்டில் முனைவர் பட்டத்தை முடித்து ஆராய்ச்சிகளை மேற் கொண்டுவரும் 15 அறிவியலாளர்களுக்கு த.ஸ்டாலின் குணசேகரன் பாராட்டு மடல்களை வழங்கினார். 12 ஜப்பான் வாழ் மூத்த அறிவியலாளர்கள் இம்மாநாட்டில் கருத்துரை வழங்கினர். மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் காணொலி ‘ மூலமாக நிறைவுரையாற்றினார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை ஆலோசகர் ச.கமலக் கண்ணன், தலைவர் வே. கிருஷ்ணசாமி, துணைத்தலைவர்கள் மு.குணசீலன், வெ.சீனிவாசன் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.



