நாடு முழுவதும் விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் கோவையில் உத்தரபிரதேச மாநில மக்கள் கூட்டமைப்பு சார்பில் துர்கா பூஜை நிகழ்ச்சி, ஆடல் பாடல் என உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஒன்பது நாள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் உச்ச நிகழ்ச்சியாக விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றியை கொண்டாடும் விழாவாக விஜயதசமி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ஜன்ஹித் சேவா சன்ஸ்தான் என்ற அமைப்பு சார்பில் வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் துர்கா பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் கோவை வாழ் உத்தர பிரதேச மாநில மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த துர்கா தேவியை தீபமேற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து பஜனை, கீர்த்தனைகளுடன் நடைபெற்ற இந்த துர்கா பூஜை விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பிரபல நடனமான போஜ்புரி நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர்.



