தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக அரசு மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் போலியான குற்றச்சாட்டுகள் வைப்பதில் முதன்மை இடத்தில் பாஜக இருக்கிறது என்பதும் அண்மைக் காலமாக அந்த இடத்தை பிடிப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் போட்டிபோட்டு கொண்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்பதும் திமுகவின் விமர்சனமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது அதிமுக, பாஜக இரண்டுக்கும் தவெக சளைத்ததல்ல என்று கூறும்வகையில் விஜய் பொய்ப் பிரசாரத்தில் களமிறங்கி விட்டார் என்று திமுக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய விஜய், நேற்று முன்தினம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவை போலியான… பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதை தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு அம்பலப்படுத்தி உள்ளது.
விஜய், ஆளும் திமுக அரசை கடுமையாகத் தாக்கி பேசினார். அவர் பேசும்போது “சிஎம் சார், மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா, இல்லை வெளிநாட்டில் முதலீடா..?” என்று கேள்வி எழுப்பினார். கேள்வி எதுகை மோனையோடு கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.
ஒரு முதலமைச்சர் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, ஏதேனும் ஒரு ஆதாரத்தைக் காட்டி அல்லவா பேசியிருக்க வேண்டும். அரசியலில் இதுபோன்று மூன்றாம் தரப் பேச்சாளர்கள் பேசுவது உண்டு. சமீபத்தில் இதே குற்றச்சாட்டைக் கூறி அந்த லிஸ்டில் இணைந்தார் எடப்பாடி பழனிசாமி. இப்போது விஜய் இணைந்துள்ளார். இருவரிடமும் ஆதாரம் ஏதுமில்லை. ஆக, விஜயின் இந்த குற்றச்சாட்டில் கடுகளவு கூட உண்மை இல்லை என்பதே உண்மை.
நாகப்பட்டினத்தில் கடல்சார் கல்லூரி ஏதும் இல்லை என்றார் விஜய். ஆனால் அங்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது என்பதே உண்மை.
மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது விஜயின் குற்றச்சாட்டு. இது பொய். தமிழ்நாடு அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்த அலையாத்திக் காடுகள் இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது என்பதே உண்மை.
பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டுக்கு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா? என்பது விஜயின் இன்னொரு பொய் குற்றச்சாட்டு.
ஆனால் உண்மை என்ன? சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடியின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.
நாகூர் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க ஒரு மருத்துவர்கூட இல்லை -என்று விஜய் கூறியதும் பொய்தான். அம்மருத்துவமனை வலுவான கட்டமைப்போடு செயல்படுகிறது என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி இருக்கிறார்.
முழு பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல, விஜய் சொன்ன இன்னொரு அப்பட்டமான பொய் என்ன தெரியுமா? நான் பிரச்சாரம் செய்யும்போது தமிழ்நாடு அரசு மின்சாரத்தை தடை செய்கிறது என்பது தான்.
உண்மை என்னவென்றால், விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தில் பாதுகாப்பு கருதி மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என நாகை மாவட்ட தவெக மாவட்ட செயலாளரே மின்வாரியத்திடம் மனு அளித்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆக, விஜய் ஐந்து நிமிடத்தில் ஐந்தாறு பொய்களை சர்வசாதாரணமாகக் கூறும் புதியதோர் பிரசாரத்தை முன்னெடுத்து இருக்கிறார்.
திமுக தனது அரசியல் எதிரி என்றும், பாஜக- தனது கொள்கை எதிரி என்றும் கூறி வரும் நடிகர் விஜய், அடுத்தகட்ட பிரசாரத்தில் என்னென்ன பொய்களை அவிழ்த்து விடப்போகிறாரோ?
வரும் சனிக்கிழமை வரை காத்திருப்போம்!



