தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பெண் காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடந்த 08.03.2025 முதல் 20.09.25 வரை கோவை பணியிடை பயிற்சி மையத்தில் இரண்டு கட்டங்களாக (Phase-I & Phase-II) நடைபெற்றன.
இப்பயிற்சி வகுப்பில், கோயமுத்தூர் சரகம், கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் பெண் காவலர்கள் முதல் பெண் சிறப்பு எஸ்ஐக்கள் நிலை வரையிலான 1946 ஆளிநர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
இப்பயிற்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், அவர்களை கையாளும் முறைகள், புலனாய்வு நுட்பங்கள், வழக்கு ஆவணங்களை ஆவணப்படுத்துதல், போக்சோ மற்றும் சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தெளிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு, மறுவாழ்வு மற்றும் அரசு உதவி குறித்த வகுப்புகள் இடம்பெற்றன. மேலும் உடல் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் நோக்கில் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முந்தினம் நடைபெற்ற இப்பயிற்சி நிறைவு விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கியதோடு இப்பயிற்சியில் பங்கேற்ற பெண் காவல் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.



