fbpx
Homeபிற செய்திகள்ஒன்றிணைய இபிஎஸ் தடை, அதிமுகவுக்கு பின்னடைவே!

ஒன்றிணைய இபிஎஸ் தடை, அதிமுகவுக்கு பின்னடைவே!

‘தமிழ்நாட்டை 30 ஆண்டுகளாக ஆண்ட அதிமுக என்ற ஆலமரத்தின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது? மூத்த இயக்கமான திமுகவால் கூட செய்ய முடியாத தொடர் வெற்றியை பதிவு செய்த அதிமுகவின் இப்போதைய நிலை என்ன? நேற்று முளைத்தவர்கள் எல்லாம் திமுகவுக்கும் தங்களுக்கும்தான் போட்டி என்கிறார்கள். அப்படி என்றால் நாம் என்ன நிலையில் இருக்கிறோம்..’ இப்படி அடுக்கடுக்கான கேள்விகளோடு குமுறி வருகின்றனர் அதிமுக தொண்டர்கள்.

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள்.. வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் நிலையில், மாட்டவே மாட்டேன் என்று மறுப்பு தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் அதிகளவில் பிரிப்பார் என்பதை அனைத்து தரப்பினருமே ஏற்றுக்கொள்கின்றனர். நிலைமை இப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்திற்கு அப்படி என்னதான் காரணம் என்று கேள்விகளும் எழுகின்றன.

2016ம் ஆண்டு இறுதியில் அப்போதைய முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்த பின்னர், ஆட்சி நிலைக்காது.. கட்சி நிலைக்காது என்கிற பேச்சு எழுந்தது. ஆனால், முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க, கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்தார் ஓபிஎஸ். இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் இருக்க, அடுத்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, அதிமுகவை தன்வயப்படுத்துவார் என்று அவரது ஆதரவாளர்களே எதிர்பார்த்த நிலையில், அவர் ஒதுங்கியே இருந்தார்.

2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, 2022ம் ஆண்டு அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக, பொதுச்செயலாளராக தன்னை நிறுவிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கினார். பொதுக்குழு நடக்கும்போது எம்ஜிஆர் மாளிகையை ஓபிஎஸ் சூறையாடினார் என்பதே இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டு. இதற்குப் பிறகு அதிமுக என்ற பேரியக்கம், தனித்தனி அணிகளாக மாற, 2026 தேர்தல் வாழ்வா சாவா என்ற தேர்தலாக மாறி இருக்கிறது.

அதிமுகவில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர், அதிமுகவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரிந்து கிடக்கும் கட்சியை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் என்று கேள்வி, கட்சி தொண்டர்களிடமே மேலோங்கி வருகிறது. யாரை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு பயம், எதற்காக கட்சி ஒன்றிணைவதை தடுக்கிறார் என்று நிர்வாகிகளும் யோசிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நேரத்தில், கட்சியின் தலைமையே வேண்டாம் என்று சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைக்கு வந்த பிறகும், இபிஎஸ் பிடிவாதம் காட்டுவது ஏன்? டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் கட்சிக்குள் வந்தால், தன் தலைமைக்கு பாதிப்பு என எடப்பாடி பழனிசாமி அஞ்சுகிறார் என்பது தான் அப்பட்டமான உண்மை.

ஜெயலலிதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.எம் வீரப்பனை கட்சியில் சேர்த்துக் கொண்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு தனது தலைமையின் மேலேயே நம்பிக்கையில்லை என்பது தான் தற்போதைய நிலை. அதனாலேயே யாரையும் சேர்த்துக் கொள்ள தயங்குகிறார். இங்கே எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் தான் மறைந்திருக்கிறது.

இந்த நிலையில் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இது எதிர்பார்த்த ஒன்று தான். இதன் மூலம் ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்கப்போவதில்லை என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதையே இந்த நடவடிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

ஆக, அதிமுகவில் மேலும் ஒரு விரிசல் ஏற்பட்டிருப்பது நிதர்சமான உண்மை. செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வு எப்படிப்பட்டதாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பெரும் பின்னடைவாகத் தான் இருக்கும்!

படிக்க வேண்டும்

spot_img