படெக்சில் தலைவர் கே.சக்திவேல், இலங்கை சென்றபோது ஒரு முக்கியமான இந்திய துணி ஏற்றுமதியாளர்கள் குழுவை வழிநடத்தியுள்ளார். இந்த பயணம் இருநாட்டு வணிகத்தை மேம்படுத்துவதாகவும், தொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகம், புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை ஆய்வு செய்வதாகவும் அமைந்தது.
இக்குழுவில் படெக்சில் துணைத் தலைவர் சந்திரசேகர், ஏற்றுமதி குழு ஒருங்கிணைப்பாளர் பாரத் சர்ச்சாகர், மற்றும் FABEXA உறுப்பினர்கள் இருந்தனர். கொழும்புவில் இந்திய துணி ஏற்றுமதியை இலங்கைக்கு விரிவுபடுத்தும் வழிகளைப் பற்றி இக்குழு விவாதித்தது.
இந்தியாவின் பவர் லூம் துணிகள் மற்றும் ஹோம் டெக்ஸ்டைல்களின் தரம், வகைமைகள் மற்றும் விலை போட்டி திறன் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், இலங்கை தொழில் அமைச்சரையும் சந்தித்த குழு, இருநாட்டு தொழிலாளர்கள் இடையே ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, அறிவு பரிமாற்றம் மற்றும் பராமரிப்பு தொழில் நுட்பங்கள் தொடர்பான திட்டங்களை விவாதித்தது.
அத்துடன், இலங்கையின் முன்னணி துணி இறக்குமதியாளர்கள் மற்றும் தொழில் அமைப்புகளுடன் இந்திய துணிகள், மேட்-அப்கள் ஆகியவற்றின் இறக்குமதியை அதிகரித்தல், நேரடி வணிகம் மற்றும் பையர்-செல்லர் சந்திப்புகள், வர்த்தக கண்காட்சிகளில் இருநாட்டு பங்கேற்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சந்தை அணுகல் மேம்பாடு குறித்து விவாதிக் கப்பட்டது.
இந்த பயணத்தின் சிறப்பம்சமாக, சக்தி வேலுக்கு, Intex South Asia கண்காட்சியில் படெக்சிலின் கடந்த 10 ஆண்டுகளாக கூடிய பங்களிப்பிற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது, தெற்காசி யாவின் துணி வர்த்தக வளர்ச்சியில் இந்தியாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
இது தொடர்பாக சக்திவேல் கூறுகையில், இந்த சந்திப்பு இருநாட்டு உறவுகளில் ஒரு நீடித்த ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்கும் என்றும், இந்திய துணி தயாரிப்பாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



