கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் பிச்சாவரம் சுற்றுலா தலத்தினை அயலகத் தமிழர்களின் வாரிசுகள் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு பகுதியாக, பல தலைமுறைகளுக்கு முன்பு இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காகவும், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள உறவை புதுப்பிக்கும் நோக்கிலும் ‘வேர்களைத் தேடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த கிராமங்களைக் கண்டறியவும், அவர்களது பாரம்பரியங்களுடன் மீண்டும் இணையவும் இந்த திட்டம் உதவுகிறது. வெளிநாட்டில் வாழும் 18 முதல் 30 வயது வரையிலான தமிழ் இளைஞர்களை தமிழக அரசு செலவில் தமிழகத்திற்கு வரவழைத்து அவர்கள் தமிழர்கள் பெருமையை அறியும் விதமாக இந்த பண்பாட்டு பயணத்திட்டம் உதவுகிறது.
வேர்களைத் தேடி என்ற இந்த பயணத்தில் அயலகத் தமிழர்கள், தமிழக கலாசாரம், கட்டடக்கலை, முக்கிய நீர்நிலைகள், பழம்பெரும் கோவில்கள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்வதற்காக இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை அயலாக தமிழர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ‘வேர்களைத் தேடி’ திட்டத்தில் அயலகத் தமி ழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வாயிலாக பிரான்ஸ், ஜெர்மன், மலேசியா, கனடா, மியான்மர், இலங்கை, பிஜி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த சுமார் 100 அயலக தமிழர்களின் வாரிசுகள் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து கட்டடக் கலைகளையும், சிற்பங்களையும், உலகிற்கு தேவாரம் மற்றும் திருவாசகம் கிடைக்கப் பெற்ற இடத்தினையும், தங்கத்தால் ஆன கோபுரத்தினையும் பார்த்து ரசித்தனர். மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலங்களுடன் கூடிய அலையாத்தி காடுகளை கொண்ட பிச்சாவரம் சுற்றுலா மையத்தினையும் பார்வையிட்டு, படகுசவாரி மேற்கொண்டனர்.
நிகழ்வில் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் கண்ணன்,அயலக தமிழர்கள் நலன் மற்றும் மறு வாழ்வு ஆணையரக அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



