fbpx
Homeபிற செய்திகள்அதிமுகவிற்கு எதிராக காய் நகர்த்தும் ஓ.பி.எஸ் - பிரேமலதா: விளைவு?

அதிமுகவிற்கு எதிராக காய் நகர்த்தும் ஓ.பி.எஸ் – பிரேமலதா: விளைவு?

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதனைத் தொடர்ந்து காலையில் நடைப்பயிற்சி சென்றபோது முதல்வர் ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்றார் ஓபிஎஸ். அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார்.

மு.க.ஸ்டாலின் & ஓபிஎஸ் இடையேயான சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. இது மரியாதை நிமித்தமாக பரஸ்பர உடல்நலம் விசாரிப்புக்கான சந்திப்பு தான் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னாலும் இருவரும் ஒரே நாளில் இருமுறை சந்தித்துக் கொண்டது தமிழ்நாடு அரசியலில் புதியதோர் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது. ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணி பக்கம் சாய்வாரா? என்ற விவாதமும் தலைதூக்கியது.

ஓ.பன்னீர்செல்வம் முடிவால் அதிமுக கூட்டணிக்கு தென் மண்டலத்தில் வர வேண்டிய முக்குலத்தோர் வாக்குகள் கடுமையாக சரியும். அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் முக்குலத்தோர் கடுமையாக அதிர்ச்சி அடையும் வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனித்துப் போட்டியிட்டு மூன்று லட்சம் வாக்குகள் வாங்கினார் என்பது ஒரு சான்றாக கூறப்படுகிறது.

அதேபோல தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துப் பேசி உள்ளார். இந்த சந்திப்பில், பிரேமலதா விஜயகாந்த் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க.முத்துவின் மறைவுக்கும் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார். இவரும் அதிமுக பக்கம் செல்லாமல் திமுக பக்கம் சாய்வதற்கான சாத்தியக்கூறு அதிகமாகி வருவதாகவே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் தந்தை &-மகன் மோதலில் அக்கட்சி சிதைவுற்று கிடக்கிறது. மோதல் உச்சக்கட்டத்தை எட்டி விட்டது. ராமதாசா? அன்புமணியா? – யார் தலைமையில் பாமக சட்டப்படி இயங்குகிறது என்பதை அக்கட்சியின் தொண்டர்கள் கூட நிர்ணயம் செய்ய முடியாமல் குழப்பத்தின் உச்சியில் உள்ளனர். ஓரளவு வாக்கு வங்கி உள்ள பாமகவில் ஏற்பட்ட விரிசலும் உடைசலும் அதிமுகவுக்கு எதிரான பிரேமலதா விஜயகாந்தின் புதிய போக்கும் தற்போதைய சூழலில் அதிமுகவை நிலைகுலையச் செய்துள்ளது என்றால் மிகையல்ல.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எப்படியானாலும் திமுக, அதிமுக- பாஜக, தவெக, நாதக என நான்கு முனைப்போட்டி உறுதியாகி விட்டது.


தன் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, மீண்டும் 7வது முறையாக ஆட்சி அமைப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். எனது தலைமையில் தான் ஆட்சி அமையப்போகிறது என்று சொல்கிறார், எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது என்கிறார், தவெக தலைவர் விஜய். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனித்து களம் காண்கிறார் சீமான். வெற்றிக்கனியை வழங்கி, யாரை முதல்வர் நாற்காலியில் அமர்த்துவது என்பதை தமிழ்நாட்டு வாக்காளர்கள் இன்னுமா முடிவு செய்யாமல் இருப்பார்கள்? ஒற்றை விரலால் அதை உறுதி செய்வதற்காகத் தான் காத்திருக்கிறார்கள்!

படிக்க வேண்டும்

spot_img