நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், அகில இந்திய கட்டுநர் சங்கம், நாமக்கல் மையம் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி சார்பில், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மையத்தின் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் உறுப்பினரும் அரசு ஒப்பந்ததாரருமான ஆர்.பேரரசு முன்னிலை வகித்தார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா நாமக்கல் மையத் தலைவர் பி.எஸ்.டி. தென்னரசு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்துப் பேசியதாவது:
நாமக்கல் கட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் இதுவரை நடைபெற்ற 9 இலவச மருத்துவ முகாம்களில் மொத்தம் 3000க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் பத்தாவது முகாம் ஆகும். ஒவ்வொரு முகாமிலும் பொது மக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தி, அவர்களுக்கு டாக்டர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் தேவையானோருக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ் வொரு முகாமிலும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு, திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான மருத்துவக் கட்டணம் கட்டுநர் சங்கத்தின் மூலம் செலுத்தப்படுகிறது. இந்த சேவையை நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
சுவாமி விவேகானந்தா மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் பொது மக்களுக்கு ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.
பில்டர்ஸ் அசோசியே சன் துணை தலைவர் குணசேகரன், இணை செயலாளர் சகாதேவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் , தொழிலதிபர் பூபதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.



