தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது குற்றமாகும். இதைத் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் மருத்துவக் கழிவுகளை சேகரித்து, உயர் வெப்பநிலை எரிப்பான்கள் (இன்சினரேட்டர்கள்) அல்லது மைக்ரோவேவ் முறைகள் மூலம் அழிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது.
ஆனால் அதனைக் கடைப்பிடிக்காமல் அண்மை காலமாக அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை வாகனங்களில் ஏற்றி, எல்லை தாண்டி தமிழ்நாட்டுக்குள் கொட்டப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக கோவை மாவட்ட எல்லைப்பகுதியில் இப்படி மருத்துவக் கழிவுகளை இரவு நேரத்தில் கொட்டிவிட்டுச் செல்லும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்தேறி வந்தன. தென்காசி, தேனி போன்ற கேரள எல்லையோர தமிழ்நாட்டு மாவட்டங்களிலும் இந்த புகார்கள் அதிகளவில் இருந்தன.
நம்மூர் தனியார் மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளும் பொது இடங்களில் கொட்டும் போக்கு இருந்தது. அப்படிக் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் பெரும் சுகாதார கேடு விளைகிறது.
துர்நாற்றத்துடன் கூடிய காற்றை அப்பகுதி மக்கள் சுவாசிக்க நேரிடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் அதிகமுண்டு. அதோடு அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடும் சூழலும் உருவானது.
தமிழ்நாடு அரசின் எச்சரிக்கையால் இதுபோன்ற விதிமீறல்கள் நடப்பது சமீபகாலமாக குறைந்து விட்டது. இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முந்தையச் சட்டம் அபராதம் போன்ற குறைந்தபட்ச தண்டனைகளைத் தான் கொடுக்க முடிந்தது. அச்சமூட்டும் தண்டனை தேவைப்பட்டது.
அதனால் தான், தமிழ்நாடு அரசு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டிக்கும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. 2025 மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, மருத்துவக் கழிவுகளை, பொது இடத்திலோ தனியார் இடத்திலோ கொட்டுவோர் விசாரணையின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். இதற்கான சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 8ம் தேதி முதல் இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்து விட்டது.
மருத்துவ கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்பதை எல்லோரும் அறியும்படியான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எப்போதும் உஷார் நிலையில் இருந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவக் கழிவுகளை கொட்டும் விதிமீறல் எங்கேனும் நடந்தால் குண்டர் தடுப்புச் சட்டம் உடனடியாக பாய வேண்டும்.
அரசின் தொய்வில்லா நடவடிக்கை தொடர்ந்தால் தான் புதிய சட்டத்தின் பயன் கிட்டும்!



