காவல் துறை கஸ்டடியில் திருப்புவனம் அஜித் குமார் கொல்லப்பட்ட வழக்கில், அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில், “அடித்துக் கொல்லுங்கள்” என்று எந்த அதிகாரியும் உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்பே இல்லை. தீவிரமாக விசாரித்து நகையை மீட்டுக்கொடுக்குமாறு அறிவுறுத்தி இருக்கலாம்.
ஆனால் சாகும் வரை அடித்துக் கொல்லும் அளவிற்கு போலீசாருக்கு வெறித்தனம் எப்படி உருவானது என்பது தான் கேள்வி. அஜித்குமாருக்கும் அந்த போலீசாருக்கும் முன்விரோதப் பகையா என்ன?. ஒன்றுமே இருக்க முடியாது. ஒருவேளை உயரதிகாரி உத்தரவிட்டாலும் மனித குணத்தை அடகு வைத்து விட்டு இப்படி கொடூரமாக நடந்து கொண்டது ஏன்?
இது போலத்தான் புகாரின் பேரில், விசாரணை செய்யப்படுபவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே முன்விரோதம் எதுவும் இருப்பதில்லை. ஆனாலும் வெறி தாக்குதல் நடக்கிறது. சாத்தான்குளம் தந்தை – மகன் சம்பவம் போல கொடூரம் நிகழ்ந்து விடுகிறது. மரணம் வரை போகாத எத்தனையோ சம்பவங்கள் யாருக்கும் தெரியாமல் புதைந்து போய் விடுகிறது.
அதிலும் போலீசை எதிர்த்து நாலு வார்த்தை பேசிவிட்டால் அவ்வளவு தான். தாக்குதல் வேகம் அதிகரித்து விடும். தண்டனை கொடுப்பதற்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன என்பதையே மறந்து விசாரணை என்ற கட்டத்தைத் தாண்டி, ஆளாளுக்கு அடித்து துன்புறுத்தி விடுகிறார்கள்.
ஒரு காவல் ஆய்வாளரையோ அல்லது உதவி ஆய்வாளரையோ எடுத்துக் கொண்டால் ஒரு நகரத்தின் ஒரு பகுதி அல்லது நாலைந்து கிராமங்களுடன் கூடிய சிறிய நகரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்ற மனநிலை இருக்கிறது.
`மக்களைக் காக்க வேண்டியது என் கடமை” என்கிற மனநிலை போய், “இந்த ஊருக்கே நான்தான்” என்கிற அகம்பாவ மனநிலை தான் இதுபோன்ற கொலை நடப்பதற்கு உந்துதலாக அமைந்து விடுகிறது என்பதில் ஐயமில்லை. காவலர்களின் மனநிலையும் அதே போல்தான் இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் திருப்புவனம் அஜித் குமார் மரணம்.
அதேநேரத்தில் ஒட்டுமொத்த காவல்துறையும் இப்படித்தான் என்று சொல்ல முடியாது. மக்கள் கடமையை கண்ணாகக் கருதி புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளும் அதிகாரிகளும் காவலர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
மார்பளவு, உயரம், உடல் பலம் போன்றவை போலீசுக்கு அவசியம் தான். குற்றம் புரிவோருக்கு போலீஸ் மீதான அச்சம் இல்லாமல் போய் விட்டால் குற்றங்களைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் தொய்வு ஏற்பட்டு விடும்.
குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் காவல்துறையினருக்கு இருக்கும் சிரமங்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் விசாரணை மற்றும் புலனாய்வு விஷயங்களில் எல்லை மீறாத ஒரு அறிவு சார்ந்த போக்கை காவல்துறையில் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது என்பதைத் தான் சாத்தான்குளம், திருப்புவனம் கஸ்டடி மரணங்கள் அறிவுறுத்துகின்றன.
காவல்துறையினரின் மனநிலையில் உளவியல் ரீதியான மாற்றங்கள் தேவைப்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம்? மத்திய – மாநில அரசுகள் தான் யோசித்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஆக, காவல் துறையில் சீர்திருத்தங்கள் அவசரமாகத் தேவைப்படுகிறது!



