வீடுகளுக்கு சூரிய மேற்கூரை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களுடன் சென்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகர நகர் பூங்கா அருகில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு சூரிய மேற்கூரை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் செய்தியாளர்களுடன் சென்று தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சியானது சூரிய மேற்கூரை அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான சூரிய மேற்கூரை அமைப்பதை நடைமுறைப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பரநகர் வணிக வளாகம், டூவிபுரம் தாலுகா அலுவலகம், வடக்கு மண்டல அலுவலகம், தருவை மைதானம் மற்றும் குறிஞ்சி நகர் கரிசல் இலக்கிய பூங்கா ஆகிய ஐந்து இடங்களில் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாம்கள் மக்களிடையே சோலார் பேனல் அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், குறிப்பாக எங்கள் வீடுகளிலும் சோலார் பேனல் அமைக்கப்பட்டு, அதன்வாயிலாக பயன்பெற்று வருகின்ற பயனாளியாக பேசுகிறேன். மேலும், எங்கள் வீடுகளில் சோலார் பேனல் அமைத்த பின்னர் மின் கட்டணம் மிகக்குறைந்த அளவிலேயே வருகிறது.
எனவே, இத்திட்டம் உலகத்திற்கும், நாட்டிற்கும், அடுத்த தலைமுறைகள் மற்றும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது. சோலார் பேனல் அமைப்பதற்கான முதலீடு என்பது சில மாதங்களிலேயே நமக்கு அது திரும்ப கிடைத்துவிடும். எனவே, சோலார் பேனல் அமைத்தால் உங்களின் மின் கட்டணம் குறைந்த அளவில் வருகின்ற சூழ்நிலை ஏற்படும், இலாபகரமானதாகவும் அமையும். காலநிலை மாற்றம் என்பது நாம் எதிர்கொள்ளுகின்ற பெரிய சவாலாக உள்ளது. எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையில் சோலார் பேனல் அமைத்து நாம் பயன்படுத்துகின்ற பொழுது எதிர்கால சந்ததியினர்களுக்கு நாம் அளிக்கின்ற மிகப்பெரிய பரிசாக அமையும்.
இந்த முகாம்களில் சூரிய மேற்கூரை அமைக்கும் திட்டத்தின் பயன்கள் குறித்தும், ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பது குறித்தும் மற்றும் மானியம் பெறும் செயல்முறை உள்ளிட்டவை குறித்தும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விற்பனை யாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்குவார்கள். எனவே, பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயன் பெறலாம், மேலும் தகவலுக்கு www.pmsuryaghar.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியதாவது:
வீடுகளுக்கு சோலார் பேனல் அமைப்பதற்கான திட்டம் குறித்த ஒரு நாள் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சோலார் பேனல் அமைப்பதன் மூலம் வீடுகளுக்கு மட்டுமல்லாது, கடைகள், விவசாயம், சிறிய அளவிலான தொழிற்சாலை உள்ளிட்ட எந்தவொரு இடங்களுக்கும் பயன்படுத்தலாம். இயற்கையாக சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் வீட்டிற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கும் சேமிப்பாக திகழ்கிறது. சோலார் பேனல் அமைத்து பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் நமது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். 10 சதுர மீட்டர் பரப்பளவில் கூட மாடியில் அமைத்துக் கொள்ளலாம். 1 முதல் 3 கிலோ வாட் வரை மானியம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் பயணத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மேற்பார்வை பொறியாளர் (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்) சகர்பாணு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.



