மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு நாட்டு நடப்பு என்ன என்பதை கற்று கொள்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் ஆசிரியர்களாக மாற முடியும் என கோவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளி வளாகத்தில் யங் இந்தியா, தளிர் அமைப்புகள் இணைந்து நடத்திய அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மாதிரி பாராளுமன்ற திட்டம் மற்றும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாதிரி பாராளுமன்றத்தில் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், இந்த மாதிரி பாராளுமன்ற நிகழ்வு என்பது ரொம்ப வித்தியாசமான நிகழ்வாக இருந்தது.
பாராளுமன்றத்தில் தேசிய கல்வி கொள்கையை சார்ந்து தர்மேந்திர பிரதான் , நிர்மலா பேசுவார்கள். ஆனால் எங்களை சார்ந்து பேசியது தமிழிச்சி தங்கபாண்டி, திருச்சி சிவா, கனிமொழி என்பது தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
மாணவர்கள் வீட்டில் இருந்து பொழுதை கழிப்பதை தவிர்த்து இந்த மாதிரியான நிகழ்வுக்கு வந்திருப்பது வாழ்த்துக்கள். எல்லாத்தையும் கற்று கொள்ள கூடிய நிகழ்வாக இது அமைய வேண்டும்.

பாராளுமன்றத்திற்கே சென்று மாணவர்கள் பார்க்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்துவதோடு நாட்டு நடப்பு என்ன என்பதை கற்று கொள்வதன் மூலம் நீங்கள் ஆசிரியர்களாக மாறுவீர்கள்.
நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்று நினைத்தால் அதுவே ஆகுவீர்கள். மாணவர்களுக்கு அரசியல் சிந்தனை வர வேண்டும்.
நடிகர்களை தெரிந்து வைப்பதை விட உங்களது தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரும் அரசியல் தலைவர்களை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.



