இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சந்திரகலா தலை மையில் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் 4ஆம் கட்ட முகாம் ஜூலை மாதத்தில் நடத்திடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திர கலா கூறியதாவது:
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டம் 4ஆம் கட்டமாக தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இம்முகாமை செயல் படுத்திட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மூன்று மாதங்கள் சுமார் 236 முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது.
நகராட்சிகளுக்கு 5 வார்டுகளை ஒருங்கிணைத்து இரண்டு முகாம்களும், ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கு 2 முகாம்களும், 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை இணைத்து இரண்டு முகாம்கள் என மாவட்ட முழுவதும் 236 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 15 அரசுத் துறைகள் ஊரகப் பகுதிகளிலும், 13 அரசுத் துறைகள் நகரப் பகுதிகளிலும் ஒவ்வொரு முகாமிலும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான 45 விதமான சேவைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
ஒரு நாளில் 5 முகாம்கள் வீதம் வாரத்திற்கு 4 நாட்களுக்கு 20 முகாம்கள் ஒவ்வொரு வாரமும் மாவட்டம் முழுவதும் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 80 முகாம்கள், ஆகஸ்ட் மாதம் 76 முகாம்கள், செப்டம்பர் மாதம் 80 முகாம்கள் என மொத்தம் 236 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் ஜூலை முதல் வாரத்தில் முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் ஒவ்வொரு வீட்டிற்கும் முகாமின் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்து துண்டு பிரசுரங்கள், விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட வேண்டும்.
இப்பணிகளில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் போன்றோர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒவ்வொரு பணியாளரும் நாள்தோறும் 60 குடியிருப்பு வீடுகளுக்கு இந்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மற்றும் விண்ணப்பங்களை வழங்கிட வேண்டும். முகாம் நடைபெறும் பகுதிகளில் அலுவலர்கள் இவர்களை கண்காணித்து அனைத்து குடியிருப்புகளுக்கும் விழிப்புணர்வு துண்டுபிரசுரம், விண்ணப்பங்கள் சென்று சேரும் வகையில் பணியை மேற்கொள்ள வேண்டும்.
வீடு வீடாக சென்று பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இரண்டாம் வாரத்தில் முகாம்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துறை ரீதியான தீர்வு 45 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர் கீதாலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



