பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றைய தினம் அளித்த பேட்டி, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் வகையில் இருந்தது. அன்பு மணி எப்போதும் பொய்யே பேசுவார், தலைமை பண்பு இல்லாதவர், பெற்ற தாயை அடிக்க முயன்றவர், கட்சியை விட்டு நீக்குவேன் என்றெல்லாம் அரசியலைத் தாண்டி, குடும்பத்தையும் இழுத்து கடுமையாக விமர்சித்து இருப்பது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
இதன்மூலம் ராமதாஸ் &- அன்புமணி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. மோதலில் இதற்கு மேல் ஒரு உச்சம் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதாவது இனி, இருவரும் இணைய முடியாத அளவிற்கு நிலைமை எல்லை மீறிப் போய்விட்டது.
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து பாமக பொருளாளர் திலகபாமாவை அதிரடியாக நீக்கி ராமதாஸ் இன்று அறிவித்தார். இந்த நிலையில் அன்புமணியோ பாமகவில் புதிய பாதையை உருவாக்க துணிந்து விட்டார். அதற்காகக் கட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல் 3 நாட்கள் ஆலோசனையைத் தொடங்கி இருக்கிறார்.
38 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் இந்த சந்திப்பில் கண்டிப்பாக பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார். அன்புமணி நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் கவனம் பெற்றுள்ளது.
அன்புமணி செயல் தலைவராக மாற்றப்பட்டாலும், அதை இன்னும் பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. அதேநேரம் தேர்தல் ஆணையமும் அன்புமணியைத் தான் இன்னும் தலைவராக கருதுகிறது.
எனவே, அவசர பொதுக்குழுவை கூட்டி தனக்கு இருக்கும் பலத்தை பயன்படுத்தி அனைத்து அதிகாரங்களையும் பறிக்க அன்புமணி திட்டமிட்டார்.
அதன்படியே இன்றைய ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பேசும்போது, தான் தான் பொதுக்குழு தேர்ந்தெடுத்த அங்கீகரிக்கப்பட்ட பாமக தலைவர் என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்ல பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கியது செல்லாது என்றும் அவரே பொருளாளராக நீடிப்பார் என்றும் ஆவேசப்பட்டார். எந்த மாவட்ட செயலாளர்களையும் வேறு யாராலும் நீக்க முடியாது என்றும் அறிவித்தார்.
அதிமுகவில் கட்சித் தலைமைக்கு இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடந்த மோதல், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் வரை போனது.
ஆனால் இன்னும் ஏதோ ஒரு வகையில் ஓபிஎஸ் உரிமை கொண்டாடி வந்தாலும் தற்போது அக்கட்சி இபிஎஸ் வசமே உள்ளது. அதே போன்ற சூழ்நிலை தான் பாமகவிலும் ஆரம்பித்து இருக்கிறது. பாமக யார் கைக்கு போகும்? யார் ஓரங்கட்டப்படுவார்?
பாமக தமிழக அரசியலில் தடம்பதித்த கட்சி. அதற்கென நெடிய வரலாறு உண்டு. அதனோடு தேர்தல் கூட்டணி வைக்க மாறிமாறி தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகள் போட்டிபோட்டு பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு தலைநிமிர்ந்து வளர்ந்த அந்த கட்சிக்கு இப்போது தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சலசலப்புகளால் பாமக தொண்டர்கள் தான் கடுமையாக அதிர்ந்து போயிருக்கிறார்கள். ருசியான பாமக என்கிற மாம்பழம் யார் கைக்குப் போகப்போகிறது?



