இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் அணிவ் ஆதித்யா விக்ரம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
கோவை மாவட்டம் சின்னதடாகம் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவரது மகன் அணிவ் ஆதித்யா விக்ரம் (வயது 6). கோவை யுவபாரதி பப்ளிக் பள்ளியில் 1-ம் வகுப்பு பயின்று வரும் அணிவ் ஆதித்யா விக்ரம், ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார்.
இந்நிலையில், இந்திய அளவிலான அதிவேக ஸ்கேட்டிங் சம்மேளனப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற அணிவ் ஆதித்யா விக்ரம், இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்ச்சி பெற்றார்.
பின்னர், இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அணிவ் ஆதித்யா விக்ரம் பங்கேற்றார். இந்தப் போட்டியில் 7-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில், கோவை மாணவர் அணிவ் ஆதித்யா விக்ரம் 1,000 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம், 400 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பதக்கங்கள் வென்ற மாணவர் அணிவ் ஆதித்யா விக்ரம் மற்றும் பயிற்சியாளர்கள் பிரசாந்த், பிரகாஷ் ஆகியோருக்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சின்ன தடாகம் பகுதி பொதுமக்கள் மற்றும் ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.



