தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் அதிகன மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று கோவைக்கு வந்துள்ளனர். இவர்களில் ஒரு பகுதி குழுவினர் வால்பாறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரும் கோவையில் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கடையில் டாப்சிலிப் பகுதி யில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோவை ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக் கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. மாவட்ட சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியிலும் மண்டல வாரியாக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன” இவ்வாறு தெரிவித்தார்.
கோவை, நீலகிரியில் இன்று கனமழை
தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் அவிலாஞ்சி, பந்தலூரில் நேற்று 11 செமீ மழையும் கோவை மாவட்டம் சின்ன கல்லாறில் 9 செமீ மழையும் கொட்டித் தீர்த்தது. தொடர் மழை காரணமாக உதகை படகு இல்லம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



