fbpx
Homeபிற செய்திகள்ரயில்கள், ரயில்நிலையங்களில் குற்றங்கள் தடுக்க என்ன வழி?

ரயில்கள், ரயில்நிலையங்களில் குற்றங்கள் தடுக்க என்ன வழி?

ரயில் நிலையங்களில் குறிப்பாக சென்னையில் ரயில் பயணிகளிடம் திருட்டு, பெண் பயணியருக்கு பாலியல் தொல்லை, ரயில் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

இந்த குற்றங்கள் அதிகரிப்பதற்கு ரயில்நிலையங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளும் ஒரு காரணமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குற்றம்சாட்டுவது பொதுமக்களோ ரயில் பயணிகளோ மட்டுமல்ல, ரயில்போ பாதுகாப்பு படையே இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது.

சென்னை கிண்டி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, கொருக்குப்பேட்டை, அம்பத்தூர், சைதாப்பேட்டை, ஊரப்பாக்கம், ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, விண்ணமங்கலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திண்டிவனம் உட்பட 60க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.

அக்கடைகளில் மது அருந்திவிட்டு ரயில் நிலையங்களுக்குள் நுழையும் சமூக விரோதிகள், பயணியரிடமிருந்து கைப்பேசிகள், நகைககளைத் திருடுவது, பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு இழைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் மது போதையில் தான் பிடிபடுகிறார்கள். அதனால் தான் ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் திருட்டு, பாலியல் குற்றங்களுக்கு அவற்றின் அருகில் உள்ள மதுக்கடைகளும் ஒரு காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் ரயில்வே பாதுகாப்பு படை தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே ரயில்நிலையங்களுக்கு மிக அருகில் இருக்கும் மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில்நிலையப் பகுதிகளில் மாநகர காவல் துறையின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகள் மாநில அரசின் கொள்கை முடிவு என்றாலும் ரயில்வே பாதுகாப்பு படையினரின் முறையீட்டை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் குற்றங்கள் நடப்பதற்கு டாஸ்மாக் கடைகளே காரணம் எனக்கூறி தட்டிக்கழிக்காமல் ரயில்களிலும் ரயில்நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உண்டு.

சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் காவலர்களை நியமித்தும் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியும் ரயில் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது மிகமிக அவசியம்!

படிக்க வேண்டும்

spot_img