Homeதலையங்கம்தேர்தல் களத்தில் வெற்றிவாகைசூடட்டும் வினேஷ் போகத்!

தேர்தல் களத்தில் வெற்றிவாகைசூடட்டும் வினேஷ் போகத்!

ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரா பக்தா கிராமத்தில் அவர் தனது பரப்புரையை தொடங்கினார். இது வினேஷ் போகத்தின் கணவர் சோம்வீர் ராட்டியின் சொந்த ஊராகும்.

ஆகவே, அவர் அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அங்குள்ள காப் என அழைக்கப்படும் 7 பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகளால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
ஜூலானா தொகுதி ஜாட் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும். வினேஷ் போகத் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பெருமளவு ஆதரவு கிட்டும் என்ற நம்பிக்கை ஒளி தெரிகிறது. வினேஷ் போகத் பிரபல மல்யுத்த வீராங்கனை என்பதாலும் அவர் மகளிர் ஆதரவு நடவடிக்கைகளுக்கு வலு சேர்ப்பார் என்பதாலும் அவருக்கு கூடுதல் வாக்குகள் கிட்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணிப்பு.

அதேநேரம், வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மல்யுத்த சம்மேளனத்தின் அப்போதைய தலைவர் ப்ரிஜ் பூஷனுக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்பதை காட்டும் விதமாக உள்ளது என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இருந்த போதிலும் வினேஷ் போகத் மீது நாடு முழுவதும் ஒரு அனுதாபம் இருப்பதால் அவருக்கு எதிரான கருத்துக்கள், சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு எதிராக திரும்பலாம் என பாஜக தலைமை அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியல் என்றால் எதிரும் புதிருமான கருத்துகள் எதிரொலிக்கத்தான் செய்யும். ப்ரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டக்களத்தில் வினேஷ் போகத் தரதரவென காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போதே அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. மல்யுத்த களத்தில் தங்கப்பதக்கத்தை சிறிதளவு கூடுதல் உடல் எடையால் பறிகொடுத்தபோது அவரை நாடே தாங்கிப் பிடித்து ஆறுதலை வெளிப்படுத்தியது.
இப்போது அவர் தன் சொந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்பு தந்துள்ள காங்கிரஸ் கட்சிக்காக மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் அவர் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.

ஒலிம்பிக்கில் வெற்றிவாய்ப்பை தவறவிட்ட வினேஷ் போகத், தேர்தலில் வெற்றிவாகை சூடி அரசியல் களத்திலும் ஆழமாக தடம் பதிக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img