கடந்த சில மாதங்களாகவே ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட யானைக்கு பாகுபலி என மக்களால் பெயரிட்டு அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், சமயபுரம், நெல்லித்துறை, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை ஊமப்பாளையம் பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் சர்வ சாதாரணமாக உலா வந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். சற்றுநேரத்தில் பாகுபலி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் சமீபகாலமாக பாகுபலி யானையின் நடமாட்டம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.இதனால் விளைநிலங்களில் இரவு காவல் பணிக்கும், பகல் நேரங்களில் தோட்டப்பணிகளுக்கும் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



