தமிழகத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத்தேர்வு வரும் அக்.19ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1500 வீதம் இரு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இதில் 50% அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், மீதமுள்ள 50% அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்விற்கான விண்ணப்பிக்க வரும் செப்.19 ஆம் தேதி கடைசி நாள்.தேர்வு கட்டணம் ரூ.50.தேர்வு நாள் வரும் அக்.19ஆம் தேதி.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் வரும் செப்.15 முதல் நடைபெற உள்ளது.கூடுதல் விவரங்களுக்கு நூலகர், அறிவு சார் மையம்,மணி நகர்,மேட்டுப்பாளையம் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என நகராட்சி கமிஷனர் அமுதா நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



