குழந்தைகள் தொடர்ந்து செல்போன் மற்றும் கணினி பார்ப்பது கிட்ட பார்வை பிரச்னை ஏற்படுத்தும் என்று அரசன் கண் மருத்துவமனை தலைவர் பன்னீர்செல்வம் கூறினார்.
அரசன் கண் மருத்துவமனை இதயம் நற்பணி இயக்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடை பெற்றது. இதயம் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் மகாதேவன் நிகழ்ச்சிக்கு தலைமை வைத்தார். பேரணியை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
பின்னர் பன்னீர்செல்வம் கூறியதாவது: குழந்தைகளிடம் பெற்றோர்கள், செல்போன் கணினி வழங்குவதை தவிர்க்க வேண்டும். கல்வி சம்பந்தமாக இன்று செல்போன் உபயோகப்படுத்துவது மாணவர்களுக்கு அவசியமாக உள்ளது. இருந்தபோதிலும் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 செகண்ட் கண்களை மூடி திறக்க வேண்டும். இதனால் கண்களுக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்.
தொடர்ந்து கணினியை செல்போனையும் பார்த்துக் கொண்டிருப்பது சிறு குழந்தைகள் மூளை வளர்ச்சியை பாதிக்கும். கண்களில் ஈரப்பதம் குறையும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றால் கண்பார்வை இழப்பு ஏற்படும். கண்களில் நீர் அழுத்தம் ஏற்பட்டாலும் கண் பார்வை பாதிக்கும். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஈரோடு அரசன் கண் மருத்து மனை கண் வங்கி 2001 இல் துவக்கப்பட்டது. இதுவரை 15,000 கருவிழிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. 1200 கண் மாற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏழு முதல் எட்டு சதவீத மக்கள் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்துள்ளனர்.
ஆனால் கிடைக்கும் கருவிழி 2% தான். கிடைக்கும் கருவிழியும் தரமானதாக இல்லை. எனவே விபத்தின் போது யாராவது இறந்தாலோ அல்லது மூளை சாவு அடைந்தாலோ உறவினர்கள் கண் தானம் செய்ய முன்வர வேண்டும். மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டு இளம் மருத்துவர்கள் மருத்துவமனையில் பயிற்சி பெறுகின்றனர். அது மட்டும் அல்லாமல் கானா, ஜிம்பாவே நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவமனையில் ஒரு லட்சத்துக்கு மேல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு அந்த அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 2000 வழங்குகிறது.



