fbpx
Homeதலையங்கம்பிரதமர் மோடி கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்!

பிரதமர் மோடி கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்!

5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.

மத்திய பிரதேசத்தில் பாஜக, யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது. யாதவ் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கி பாஜக அதிரடி காட்டி உள்ளது.

முக்கியமாக சிட்டிங் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஓரம் கட்டப்பட்டு உள்ளார். அதாவது சிவராஜ் சிங் சவுகான் மாநில முகமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஒதுக்கப்படுகிறார்.

மேலும் ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது.

ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு பாஜகவில் பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல சத்தீஸ்கரில் பாஜக அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்று, அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.

சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது போக சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் டாக்டர் ராமன் சிங், அருண் சவ் துர்க். எம்பி விஜய் பாகேல் மற்றும்
முன்னாள் ஐஏஎஸ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ஓபி சவுத்ரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக இருந்தனர். அவர்கள் எல்லோரும் ஓரம்கட்டப்பட்டு உள்ளனர்.

தன்னை தவிர பாஜகவில் மாநில அளவில் வலுவான முகம் இருக்க கூடாது என்பதில் மோடி உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.
ஆக, மாநிலங்களில் பாஜகவின் முகமாக இருக்கும் நபர்களை ஒதுக்கிவிட்டு புதிய முகங்களை கொண்டு வரும் முடிவை பாஜக எடுத்துள்ளது.

மாநில அளவில் பாஜகவிற்கு என்று முகங்கள் உருவாவதை பிரதமர் மோடியோ, டெல்லி மேலிடமோ விரும்ப இல்லை. உதாரணமாக கர்நாடாகாவில் பாஜகவின் முகமாக எடியூரப்பா இருந்தார். அவரை ஒதுக்கிவிட்டு பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டதைச் சொல்லலாம்.

இதையெல்லாம் பார்க்கும்போது பாஜக என்றால் தன் முகம் மட்டுமே அனைவரது கண் முன் தோன்ற வேண்டும், அதுவும் விஸ்வரூபமாக தோன்ற வேண்டும் என்ற பிரம்மாஸ்திரத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெல்லப்போவது மோடியா, இந்தியா கூட்டணியா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img