திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ் பாபு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் அது குறித்த விசாரணை அமலாக்கத்துறைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி 3 கோடி கேட்டு தர மறுத்ததால் 51 லட்சம் கண்டிப்பாக தரவேண்டும் என்று கூறி மருத்துவரை மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் நேற்று ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தை பெற்றுக் கொண்டு, காரில் தப்ப முயன்றபோது அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
திவாரி தற்போது மதுரையில் பணியாற்றி வரும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை.
இது ஒருபுறம் இருக்க, மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தியாவிலேயே முதல் முறையாக இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
லஞ்ச வழக்கு விசாரணை விரிவடைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சட்டம் மத்திய அரசு அதிகாரிகளை கைது செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. மத்திய அரசு ஊழியரைக் கைது செய்யச் சிறப்பாகச் சிறப்பு நடைமுறை என்று எல்லாம் எதுவும் இல்லை.
மத்திய அரசு ஊழியர் என்றாலும் சரி மாநில அரசு ஊழியர் என்று யாராக இருந்தாலும் சரி கைது செய்யப்படும் நடைமுறை என்பது ஒன்றுதான். கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் அது அலுவலக உயர் அதிகாரியிடம் தெரிவித்தால் போதும்.
அனைத்து மாநில போலீசாருக்கும் அதிகாரம் இருக்கிறது.
எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்வதற்கும் கைது செய்வதற்கும் எப்படி அமலாக்கத்துறைக்கு எப்படி மிகப்பெரிய அதிகாரம் இருக்கிறதோ…அதைப்போல லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால் இந்த குற்றம் என்பது தமிழ்நாட்டில் நடந்தது.
திண்டுக்கல்லில் வைத்து பணம் வாங்கும்போது அமலாக்கத்துறை அதிகாரியை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ரசாயனம் தடவிய பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட நபரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அரசு மருத்துவராக பணியாற்றி வருபவர். எனவே இங்குள்ள போலீசாருக்கு இதில் அனைத்து அதிகாரமும் இருக்கிறது.
எப்போதும் இதுபோல ஒருவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டால் அவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்துவார்கள். வேறு எங்காவது எதையாவது பதுக்கி வைத்துள்ளாரா என்பதைக் கண்டறியவே இந்த ரெய்டு.
இப்போதும் அதைத்தான் மேற்கொண்டுள்ளனர், ஆனால் இப்போது அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடக்கும் காட்சிகள் கவலை அளிப்பதாக இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்புடன் சென்று தமிழ்நாடு விஜிலன்ஸ் துறை ரெய்டு நடத்தி வருகிறது.
ஆனால் அதற்குப் போட்டியாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு இடையூறு செய்யும்வகையில் துணை ராணுவ படையினரைக் குவித்துள்ளனர். இது பதற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் இது பொய்யான வழக்கு என்று சொல்ல வருகிறார்களா என்ன?
தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தருவதே அமலாக்கத்துறைக்கு மரியாதை. அதை விட்டு விட்டு துணை ராணுவத்தினரை குவித்து விசாரணையை தடுத்தால் அமலாக்கத்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. இதில் இரு விசாரணை அமைப்புகள் இடையே மோதல் ஏற்படுவது நல்லதல்ல!



