fbpx
Homeபிற செய்திகள்உதகை மலை ரயில் சேவை டிச.7ம் தேதி வரை ரத்து

உதகை மலை ரயில் சேவை டிச.7ம் தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி கல்லாறு – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

இதன் காரணமாக 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே உள்ள ரயில் பாதையில் பல இடங்களில் பாறைகள் மற்றும் மண் சரிந்து தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது.

ரயில் பாதையின் குறுக்கே மரங்களும் விழுந்து உள்ளன. மோசமான வானிலை மற்றும் மோசமான நிலப்பரப்பை பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேதம் அதிகமாக இருப்பதாலும், வரும் நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை வரும் டிச.7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும், குன்னூர் – ஊட்டி இடையே இயங்கும் ரயில் சேவை வரும் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதும் திரும்ப வழங்கப்படும் எனவும் நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img