fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று துவக்கம்: 2,200 வீரர்கள் பங்கேற்பு

கோவையில் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று துவக்கம்: 2,200 வீரர்கள் பங்கேற்பு

கோவை நேரு விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று துவங்குகிறது.

இது குறித்து கோவை தனியார் ஓட்டலில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் லதா நிருபர்களிடம் கூறியதாவது: கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் 38-வது தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் 7-ம் தேதி (இன்று) முதல் வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது.

இப்போட்டியில், 29 மாநிலத்தில் இருந்து 2,200 தடதள வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், தமிழ்நாட்டில் இருந்து 92 ஆண்கள், 83 பெண்கள் உள்பட மொத்தம் 175 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டிகள், 14, 16, 18, 20 ஆகிய வயது அடிப்படையில் 4 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. இதில், சர்வதேச அளவில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 400மீ ஓட்டப்பந்தய வீரர் ஷரன், 3000மீ ஓட்டப்பந்தய வீரர் யோகேஷ்வரர், மும்முறை தாண்டுதல் வீரர் யுவராஜ், டெகாத்லான் வீரர் வேதபிரியன், ஆசிய அளவில் சாதனை படைத்த மும்முறை தாண்டுதல் வீரர் செல்வபிரபு, 100மீ ஓட்டப்பந்தய வீராங்கனை அபிநயா ராஜராஜன், 100மீ, 200மீ வீராங்கனை ருத்திகா சரவணன், 400மீ ஓட்டப்பந்தய வீராங்கனை கனிஸ்டா டீனா மரியா, 400மீ மற்றும் 400மீ தடை தாண்டும் ஓட்டப்பந்தய வீராங்கனை பவித்ரா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
துவக்க விழாவில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் போட்டிகளை துவங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம் வரவேற்கிறார். அத்லெடிக் இந்திய பெடரேஷன் தலைவர் சுமாரிவாலா தலைமை தாங்குகிறார். இதில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட தடகள சங்கம் தலைவர் லீமாரோஸ் மார்டின், தமிழ்நாடு தடகள துணை தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும், சென்னைக்கு அடுத்து கோவையில் தான் போட்டிகள் நடத்த தேர்வு செய்கிறோம். இங்கு அதற்கான பல்வேறு வசதிகள், கட்டமைப்புகள் உள்ளன. தமிழக தடகள வீரர்கள் தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் ­பொறுத்தவரை தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் அதிக அளவில் பதக்கம் வருகிறது. ஆனால், ஈட்டி எறிதல் குண்டு எறிதல் போன்ற த்ரோ செய்யும் போட்டிகளில் பதக்கங்கள் வருவதில்லை. இதனை சரிசெய்ய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.

இந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் காலை 6 மணிக்கு துவங்கி இரவு 8 மணி வரை நடக்கிறது. இப்போட்டிகளில் நேஷனல் ரெக்கார்டு செய்யும் நபர்களுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். தவிர ரேண்டம் அடிப்படையில் வீரர், வீராங்கனைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.‌

மேலும், மருத்துவர்கள் மூலம் வயது தகுதி கண்டறியும் பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில், கோவை மாவட்ட தடகள சங்கம் தலைவர் லீமாரோஸ் மார்டின், பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷாரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img