தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது உணவு பாதுகாப்பு அலுவலர் என சிலர் கூறி இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்களிடம் மற்றும் இதர உணவு வணிகர்களிடம் கள ஆய்வு என்ற பெயரில் பயமுறுத்தி பணம் கேட்டால் தகவல் தெரிவிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மூலமாகவும் மற்றும் காவல் துறையின் மூலமாகவும், பயமுறுத்தி பணம் பறிப்பது போன்ற தகவல்கள் பெறப்பட்டுள்ளன. எனவே உணவு பாதுகாப்பு அலுவலர் என கூறி கள ஆய்வு மேற்கொள்ள வந்தால் அவரிடம் உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கான அடையாள அட்டை கேட்டு சரிபார்க்கவும்.
அவர்கள் மீது சந்தேகம் இருப்பின் லஞ்சம் மற்றும் இதர புகார்கள் குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண்.0422-2220922 மற்றும் 93616 38703 என்ற அலை பேசி எண்ணிற்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் 0422-2449550 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



