இந்திய பம்ப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 72-ம் ஆண்டு பொதுக்கூட்டம் கோவையில் நடந்தது. அக்வா குழுமத் தலைவர் ஆர்.குமாரவேல் தலைமை வகித்தார்.
நாடு முழுவதும் இருந்து வந்த பம்பு உற்பத்தியாளர்களால், கோவை டெக்கான் இண்டஸ்ட்ரீஸ் மேலாண்மை இயக்குநர் கே.வி.கார்த்திக், இந்திய பம்ப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டர்.
தலைவர் கே.வி.கார்த்திக் பேசியதாவது:
உலகளவில் நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம், கழிவு நீர் மேலாண்மை, சுரங்கம், ரசாயன தொழில்களில் செய்யப்பட்டு வரும் பெரும் முதலீடுகள் இந்திய பம்பு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பெரும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் நாட்டின் கடுமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சூழல்களில் பம்புகளை நிறுவிப் பெற்ற அனுபவத்துடன் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி தங்கள் தயாரிப்புகளை நவீனமாக்கி உள்ளனர்.
இந்த தயாரிப்புகள் உலக அளவில் உள்ள சிறந்த தயாரிப்புகளிடம் போட்டியிட்டு வெற்றி பெறும் தகுதியைப் பெற்றுள்ளது, நம் அனைவருக்கும் கிடைத்த பெருமை. கோவிட்19-க்குப் பின் இந்திய பம்புகளின் மீது சர்வதேச அளவில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பம்புகளின் ஏற்றுமதி 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்திய பம்புகள் உலக பம்பு வர்த்தகத்தில் முன்னணிக்கு வரக் கவனம் செலுத்தி வருகிறது.
பம்பு தொழிலில் தற்போது பொறுப்புக்கு வந்துள்ள புதிய தலைமுறையினர் சர்வதேச அளவில் நாம் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் செயல்படுகின்றனர். பிற பம்பு உற்பத்தியாளர்களுடன் இணைந்து சர்வதேச தரத்திற்கு பம்புகளை வடிவமைத்தல், கூட்டுக் கொள்முதல் மூலம் விலையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த ஒற்றுமையைப் பிற பம்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களாகிய கோவையைச் சேர்ந்த சீமா, ராஜ்கோட் இன்ஜினியரிங் அசோசியேசன் உடன் சேர்ந்து நாடு தழுவிய இயக்கமாக முன்னேற்ற முயற்சிக்கும்.
விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் பம்புகளே நமது வலிமை. இத்துடன் உயர் மதிப்பு கொண்ட கச்சா எண்ணெய், கழிவுநீர், எரிவாயு, சுரங்கம் போன்ற பயன்பாட்டுக்குத் தேவையான பம்புகளைத் தயாரித்து வழங்க வேண்டும்.
மத்திய அரசு கனரக தொழில்துறை மூலம் இத்தயாரிப்புகளைத் தயாரிக்க மானிய உதவி செய்து வருகிறது. நீர் மூழ்கி சகதி பம்புகள் தயாரிக்க ரூ.10.71 கோடி ஒதுக்கிப் பம்பு தொழிலுக்கு மிகப்பெரிய ஆதரவைத் தந்துள்ளது.
தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டு மலிவான விலையில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் பம்புகள் நேர்மையாக பம்புகள் தயாரித்து வழங்கும் நிறுவனங்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது. இந்த கள்ளச் சந்தையை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் வலுவான தகவல் தொழில் நுட்பத்துறையின் திறனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவைகளான தொலைதூரத்தில் இருந்து பம்புகளை இயக்குவது, கண்காணிப்பது, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது, தேவையான அளவு நீரைப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பூர்த்தி செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உலக சந்தையில் முன்னணிக்கு வர முடியும் என்றார்.



