fbpx
Homeதலையங்கம்கர்நாடகத்தைத் தொடர்ந்து ம.பி.யிலும் காங்கிரஸ் வெற்றி?

கர்நாடகத்தைத் தொடர்ந்து ம.பி.யிலும் காங்கிரஸ் வெற்றி?

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும் ,சுயச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்.

அதன்பிறகு ஓராண்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தவர்கள் வாபஸ் பெற்றதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வரானார். தற்போது அங்கு பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ், பாஜக கட்சியினர் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே தான் நடைபெற உள்ள மத்திய பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி ஸ்மால் பாக்ஸ் இந்தியா’ எனும் அமைப்பு சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 124 முதல் 135 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இங்கு ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை எனும் நிலையில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியை விட அதிக தொகுதிகளில் வாகை சூடலாம் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். இது பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் காங்கிரஸ், பாஜக தவிர மற்றவர்கள் 14 முதல் 17 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 சதவீத ஓட்டுகளை பெற்று ஆட்சியில் அமரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்த நிலையில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பாக வெளியாகி உள்ள இந்த கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் கொடுக்கும் வகையிலும், பாஜகவினருக்கு ஷாக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

ஆனாலும் வாக்காளர் பெருமக்கள் யாருக்கு ஷாக் கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img